தமிழக சட்டப்பேரவையில் செப்.3-ம் தேதி நடைபெற்ற விவாதத்தின்போது, முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ பேசினார். அப்போது, "மதுரை மேற்கு தொகுதியில் எந்தக் கல்லூரியும் இல்லை. எந்தக் கல்லூரியும் அந்தத் தொகுதிக்குள் அமையவில்லை. ஒரு கல்லூரி கூட இல்லை. மதுரை மேற்கு தொகுதியில் அரசு புறம்போக்கு நிலம் 9 ஏக்கர் 67 சென்ட் காலியிடம் இருக்குது. எனவே, அங்கு அரசு கல்லூரி அமைக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
அதற்குப் பதில் அளித்த உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, "மாண்புமிகு உறுப்பினருக்கு ஒண்ணு தெரிஞ்சிருக்கு. இந்த முதல் அமைச்சர்கிட்ட கேட்டாத்தான் இந்தக் காலத்திலாவது அது நடக்கும் என்று. 10 வருடமாக அமைச்சராக இருந்த அவருடைய தொகுதியிலேயே ஒரு கல்லூரி கூட இல்லை என்பது ஆச்சரியமாத்தான் இருக்குது. அவர் அப்பவே செய்திருக்கலாம். பரவாயில்லை. இப்போது கேட்டதைச் செய்து கொடுக்கிற தலைவர் இருக்கிறார்" என்றார்.
இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.