நாகர்கோவிலில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது, நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக உயர்த்துவதாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால், இப்போது நாகர்கோவில் மாநகராட்சிக்காக சுற்றுவட்டார கிராமங்களை கபளீகரம் செய்ய முயல்வதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து கன்னியாகுமரி எம்எல்ஏ தளவாய் சுந்தரம் காமதேனு இணையதளத்திடம் கூறும்போது, ‘நாகர்கோவில் உள்ளூர் திட்டப்பகுதியில் நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதி, கணியாகுளம், தர்மபுரம், இராஜாக்கமங்கலம், இராமபுரம், தேரேகால்புதூர், பீமநகரி, திருப்பதிசாரம், ஆத்திகாட்டுவிளை, எள்ளுவிளை, மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம் துறை, பறக்கை, கேசவன்புத்தன் துறை, புத்தேரி, மணக்குடி ஆகிய 15 ஊராட்சிப் பகுதிகளும், சுசீந்திரம், தேரூர், ஆளுர், புத்தளம், தெங்கம்புதூர், கணபதிபுரம் ஆகிய 6 பேரூராட்சிப் பகுதிகளும் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணையும்போது, ஊராட்சிகள் தனித்தன்மையை இழக்க நேரிடும். இந்த ஊராட்சிகளில் விவசாயம் சார்ந்த தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தென்னை மரங்களும், இயற்கை வளங்களும் நிறைந்த பகுதிகளாக இந்த ஊராட்சிகள் உள்ளன. மாநகராட்சியுடன் இணைக்கப்படும்போது, இப்பகுதி மக்கள் கூடுதலாக வரிசெலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இது மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். இதை, இந்த ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் விரும்பவில்லை.
ஊராட்சிப் பகுதிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் மக்கள் பணிசெய்து ஊதியம் பெற்றுவருகின்றனர். இவர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள். இந்த வேலைவாய்ப்பையும் இவர்கள் இழக்க நேரிடும். ஒரு மாநகராட்சி செயல்பட 2 லட்சம் மக்கள் தொகையே போதுமானது. ஏற்கெனவே நாகர்கோவில் மாநகராட்சி 2 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. ஏற்கெனவே நாகர்கோவில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் இன்னும் செய்து கொடுக்கப்படவில்லை. இந்நிலையில், மேலும் கூடுதலாக ஊராட்சிகளை இணைக்கும்போது பல்வேறு சிரமங்கள் மக்களுக்கு ஏற்படும். வீட்டு வரி, தண்ணீர் கட்டணம் ஆகியவை உயரும்” என்றார்.
அதேவேளையில், சும்மா இருந்த நாகர்கோவிலை மாநகராட்சியாக தரம் உயர்த்தியதே அதிமுக அரசுதான். மாநகராட்சி ஆனதாலேயே, சுற்றுவட்டார கிராமங்களையும் இணைக்க வேண்டியுள்ளது என்கின்றனர் திமுகவினர். மொத்தத்தில் மக்கள் பாடு திண்டாட்டம் தான்!