எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை ரத்து செய்!


தட்டில் கடிதக் கற்றைகள்

படத்தில் தம் கட்சிக் கொடிகளை பிடித்தபடி, தலையில் சும்மாடு கூட்டி ஒரு பெண்ணின் தலையில் கேக் போல எதையோ தட்டில் வைத்துக் கொண்டுவருகிறார்களே காங்கிரஸ்காரர்கள். ஏதோ, தங்கள் தலைவருக்கு பிறந்தநாள் கொண்டாடப் போகிறார்களோ என்று எண்ணிட வேண்டாம். அந்தத் தட்டில் இருப்பவை 5,000 அஞ்சல் அட்டைகள். அவை எல்லாமே பிரதமர் மோடிக்கு எழுதப்பட்ட கடிதங்கள். எங்கே, எதற்காக இப்படி?

நாட்டில் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு மட்டும் ரூ.25 உயர்ந்து ரூ.900-க்கு மேல் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இப்படி எரிவாயு விலை உயர்வதைக் கண்டித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு 5 ஆயிரம் கடிதங்கள் அனுப்பும் போராட்டம் கோவையில் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் அறிவித்திருந்தார்.

இதற்காக நேற்று காலை 11:30 மணிக்கு, ஆயிரக்கணக்கான அஞ்சலட்டை கடிதங்களை ஒரு பெண்ணின் தலையில் வைத்து, காங்கிரஸார் ஊர்வலமாக கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தனர். அவர்களுடன் மயூரா ஜெயக்குமாரும் கலந்து கொண்டார். தொடர்ந்து, அங்கே 200 அடி தொலைவில் இருந்த அஞ்சல் அலுவலகத்துக்குச் சென்று கடிதங்களை ஒட்டுமொத்தமாக அஞ்சல் ஊழியர்களிடம் ஒப்படைத்தனர்.

மயூரா ஜெயக்குமார்

இதுகுறித்து மயூரா ஜெயக்குமார் கூறும்போது, ‘‘மோடி ஆட்சியில் மக்களுக்கான எல்லா அத்தியாவசிய பொருட்களின் விலை விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கின்றது. அதிலும் கரோனா காலத்தில் வேலையில்லாமல், பொருளாதாரச் சிக்கலில் மக்கள் சிக்கி தவிக்கும்போது எரிவாயு விலை இப்படி ஏறிக் கொண்டேயிருப்பது பொறுத்துக்கொள்ள முடியாதது. அதுதான் இப்படியொரு கடிதம் அனுப்பும் போராட்டத்தை நடத்துகிறோம். இந்தப் போராட்டம் இன்னமும் பல்வேறு வடிவங்களில் தொடரும்!’’என்று தெரிவித்தார்.

‘எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும். அத்தியாவசிய பண்டங்கள் விலையை ஏற்றாதே!’ என்ற வாசகங்கள் அடங்கிய இந்த 5000 கடிதங்களை, எங்கே எப்படி யார் உட்கார்ந்து எழுதினார்கள்?

”கிளை வாரியாக ஆளாளுக்கு எழுதி வரச்சொல்லி, நேற்று இரவு மாவட்ட கட்சி அலுவலகத்தில் சேர்த்து ஒரே கட்டாக கட்டி இங்கே கொண்டு வந்தோம்!” என்று தெரிவித்தார் கட்சிக்காரர் ஒருவர்.

x