தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை


பத்ரி நாராயணன் எஸ்.பி

கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற தடைசெய்யப்பட்ட போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ. பத்ரி நாராயணன் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதுதொடர்பாக இடைவிடாது கண்காணிப்பை மேற்கொள்ளவும் மாவட்டம் முழுவதிலும் இருக்கும் போலீஸாருக்கும் உத்தரவிட்டார்.

அந்தவகையில், கோட்டார் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் செல்வ நாராயணனுக்கு ஒரு தகவல் கிடைத்தது. மீனாட்சிபுரம் பகுதியில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனைக்காக ரகசியமாக பதுக்கி வைத்திருப்பதாக தெரியவந்து காவலர்களோடு அங்கு சென்றார். அங்கே சந்தேகப்படும்படியாக நின்ற நபரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர் அதே பகுதியைச் சேர்ந்த மேக்னராம்(38) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை விசாரணை செய்து அந்த இடத்தை சோதனை செய்தபோது, அங்கு அவர், தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து, அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. பின்பு அவரிடமிருந்த 868 பாக்கெட் குட்கா, புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.5,44,635 ரொக்கத்தை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தார்.

மேலும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 23 பேர் மீது 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2842 பாக்கெட் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

x