கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு முன்பாக, நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் ஆளுக்கொரு விண்ணப்பத்துடன் இன்று குழுமினர். அவர்களை போலீஸார் கட்டுப்படுத்த படாதபாடு பட்டனர். அவர்களிடம் விசாரித்தபோது, ”திமுக ஆட்சிகாலத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட இலவச பட்டாவை அதிமுக ஆட்சியாளர்கள் ரத்து செய்துவிட்டு அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு வழங்கிவிட்டார்கள். அதை ரத்து செய்து பழையபடி எங்களுக்கே பட்டாவை வழங்க வேண்டும்!’’ என்று கோரிக்கை விடுத்தனர். அப்படியென்னதான் நடந்தது? மனு கொண்டு வந்தவர்களில் ரமேஷ்குமார் என்ற இளைஞர் இப்படி விவரித்தார்:
‘‘நாங்கள் மேட்டுப்பாளையம், காரமடை, மங்கலக்கரைப் புதூரைச் சேர்ந்தவர்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி ஆட்சி காலத்தில், எத்தப்ப நகரைச் சேர்ந்த அருந்ததிய சமூகத்தினர் 90 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டன. 4 மாதங்களுக்கு முன்பு தேர்தல் நேரத்தில், வேறு 90 பேருக்கு அதே இடத்தை பட்டா போட்டு அதிமுக கொடுத்துவிட்டது. எங்கள் பட்டாக்கள் ரத்தாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய காரியத்தை எம்எல்ஏ, அமைச்சர் ஆதரவோடு ஒரு ஏஜன்ட்டே நடத்தியுள்ளார். பணமும் விளையாடியிருக்கிறது. இதனால் எங்கள் சமூகத்தினர், உறவுகளுக்குள்ளேயே சிக்கல் ஏற்பட்டுவிட்டது. எனவேதான் அதிமுக ஆட்சியில் கொடுத்த பட்டாவை செல்லாது என்று ரத்து செய்து, பழையபடி எங்களுக்கே அந்த இடம் சேர ஏற்பாடு செய்ய கோருகிறோம்!’’ என்று தெரிவித்தார்.