விடியலுக்குக் காத்திருக்கும் விநாயகர் சிலைகள்!


தயாராகும் விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்திக்காக பூஜை செய்துவிட்டு, ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்காகச் செய்யப்படுவதுதான் விசர்ஜன விநாயகர் சிலைகள். இதற்காக அரை அடியில் ஆரம்பித்து 15, 20 அடி உயர பிரம்மாண்ட விநாயகர் சிலைகள்கூட தமிழகத்தில் செய்யப்படுகின்றன. அண்மை ஆண்டுகளாக தமிழகம் முழுவதுமே விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் விமர்சையாக நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் கரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக விநாயகர் ஊர்வலங்கள் தடைபட்டு நிற்கின்றன. இதனால், 2019-ல் ஆர்டர் செய்யப்பட்டு பிரம்மாண்டமாகத் தயாரான விநாயகர் சிலைகள்கூட, சம்பந்தப்பட்டவர்களால் வாங்கப்படாமல் 2 ஆண்டுகளாக காத்திருக்கும் அவலம் நீடிக்கிறது.

அழகப்பன்

இதனால் தமிழகம் முழுவதுமே விநாயகர் சிலைகளைச் செய்யும் கலைஞர்கள் பெரிதும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நிற்கிறார்கள். “இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட, விநாயகர் சிலை வைக்கவும் ஊர்வலம் நடத்தவும் போலீஸ் அனுமதி தராவிட்டால் தாங்கமுடியாத சோகத்துக்கும், மீளமுடியாத நஷ்டத்துக்கும் ஆளாவோம்” என தெரிவிக்கின்றனர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள்.

சுமதி

இதுகுறித்து நம்மிடம் பேசிய கோவை புட்டுவிக்கி சாலையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் அழகப்பன், “வழக்கமா பெரிதாக விநாயகர் சிலைகளை வைப்பவர்கள் ஊருக்குப் பொதுவாகவே செய்வார்கள். அது குறைந்தபட்சம் 5 முதல் 15 அடி உயரம் வரை இருக்கும். ஒரு சிலை செய்ய 5 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை கூட பிடிக்கும். ஆனால், 500 அல்லது1000 ரூபாயை மட்டுமே அட்வான்ஸ் கொடுத்து ஆர்டர் கொடுப்பார்கள். மீதியை சிலையை எடுக்க வரும்போதுதான் தருவார்கள். அப்படி 2019-ல் எங்களிடம் ஆர்டர் கொடுத்தவர்களில் 15 பேருக்கு மேல் வரவில்லை. அதனால், எங்களுக்கு மட்டுமே ஏகப்பட்ட நஷ்டம்.

போன வருஷம் சுத்தமா சிலையே செய்யக்கூடாது என்று போலீஸிலேயே வந்து சொல்லி விட்டார்கள். அதனால் பழைய சிலைகளை அப்படியே மூடி வைத்திருந்தோம். இந்த ஆண்டு பலரும் வந்து வழக்கம் போல அட்வான்ஸ் கொடுத்து ஆர்டர் கொடுக்கிறார்கள். போலீஸ் பர்மிஷன் கிடைத்து விடும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். அதேநேரம் போலீஸும் எத்தனை சிலை இருக்கிறது, இன்னும் எத்தனை செய்யப்போகிறீர்கள் என வந்து பார்த்து கணக்கெடுத்துச் சென்றுள்ளார்கள். ஏற்கெனவே செய்து வண்ணம் பூசப்பட்ட சிலைகளை திரும்பவும் வண்ணம் தீட்டி வைக்கிறோம். அரசு மனது வைத்தால்தான் எதுவும் நடக்கும். இல்லாவிட்டால் இந்த ஆண்டும் நஷ்டம்தான்!’’ என்றார்.

விநாயகர் சிலைகளை விற்கும் பொம்மைக்கடை வைத்திருக்கும் சுமதி கூறுகையில், ‘‘அரையடி, ஒரு அடி விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்து நிறையப் பேர் கும்பிடுவார்கள். அவர்கள் கூட போன வருஷம் வரவில்லை. போட்டோவை வெச்சே சமாளிச்சுட்டாங்க. எங்க தொழிலில் வெச்சுப் பார்த்தெல்லாம் வியாபாரம் பார்க்க முடியாது. ரெண்டொரு நாள் வியாபாரம் தான். அதுவும் விநாயகர் சதுர்த்திதான் திருவிழா மாதிரி. இதை நம்பியும் தமிழ்நாடு முழுக்க ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருக்காங்க. இதை எல்லாம் உத்தேசித்து அரசுதான் மனது வைக்கணும். இல்லைன்னா எங்க பொழப்பு அவ்வளவுதான்!’’ என்றார்.

காத்திருக்கும் விநாயகர்களுக்கு இந்த ஆண்டாவது விடிவு பிறக்கட்டும். இந்தத் தொழிலாளர்களின் கவலைகள் எல்லாம் காணாது மறையட்டும்.

x