கேரளத்தில் அதிகரிக்கும் பெருந்தொற்று கோவைக்கும் பாயுமா?


கலெக்டர் சமீரன் ஆய்வு

ஓணம் பண்டிகைக்கு பின்பு கேரள மாநிலத்தில் கரோனா தொற்று பெருமளவு அதிகரித்துள்ள நிலையில் மாநில எல்லைகளில் தமிழக அரசு சோதனைகளை பலப்படுத்தியுள்ளது. அதனடிப்படையில் கேரள - தமிழக எல்லையான கோவை வாளையாறு பகுதியில் நேரடியாக கள ஆய்வு செய்தார் கோவை ஆட்சியர் சமீரன்.

கேரள மாநிலத்தில் கரோ னா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் கோவையை அடுத்த தமிழக கேரள எல்லையான வாளையார் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அண்டை மாநிலங்களிலிருந்து கோவை மாவட்டத்திற்குள் வருபவர்கள் கோவிட் நெகட்டீவ் சான்றிதழ் அல்லது இரு தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில், கோவை வாளையாறு அருகே அமைந்துள்ள தமிழக சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு கண்காணிப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் 28-ம் தேதி மதியம் திடீர் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசியபோது கூறியதாவது:

கேரளாவில் சோதனை

‘‘கேரளாவில் இருந்து வருபவர்கள் பெரும்பாலும் போதுமான ஆவணங்களை வைத்திருக்கின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் வரும் நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும், அத்தியாவசிய மருத்துவ சிகிச்சைக்கு வருபவர்கள் மட்டும் உரிய ஆவணங்களின் அடிப்படையில் சோதனைச் சாவடியிலேயே கரோனா பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர். தவிர, கோவை மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு தினசரி பணிநிமித்தம் சென்று வருபவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி வழங்கும் முகாம் நடத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 4 நாட்களாக கரோனா தொற்று விகிதம் சற்று உயர்ந்துள்ளது. இது அதிகமாகாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் கோவை மாவட்டத்தில் தொற்று அதிகரிக்கும் நிலை தொடர்ந்தால் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும். தமிழக அரசின் அறிவுரையின்படி பள்ளி - கல்லூரிகள் திறக்கப்படவுள்ள சூழ்நிலையில், கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த பாலக்காடு, மலப்புரம் மாவட்ட ஆட்சியர் களுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் கேரள மாநிலத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் இரண்டாவது தவணை ஊசியை இங்கு கல்லூரிகளில் செலுத்து வதற்கும் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

x