உதயநிதி ரசிகர் மன்றமாகிறதா தமிழக சட்டமன்றம்?


முதல்வருக்கு பின் இருக்கையில் உதயநிதி

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக சட்டமன்றத்தில் தனிநபர் துதி பாடும் நிகழ்வுகள் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமியை இரும்பு நகரத்தின் கரும்பு மனிதர், சேலத்துச் சிங்கம், கொங்கு நாட்டுத் தங்கம் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினார்கள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள். ஆட்சி மாறிய பிறகும் காட்சிகள் மாறவில்லை.

முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னைப் புகழ்ந்து பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று கூறினாலும்கூட, உதயநிதியைப் புகழ்வதைத் தடை போடவில்லை. அதனால், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்களும் உதயநிதி துதி பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இன்றைய அவையில், "3 அடியால் உலகை அளந்த பெருமாள் போல முக்கால் அடிச் செங்கலில் தமிழ்நாட்டையே உலுக்கியவர் உதயநிதி" என்று பேசி கைத்தட்டல் வாங்கினார் நாமக்கல் ராமலிங்கம்.

திருவையாறு எம்எல்ஏ துரை சந்திரசேகரனோ, "எம்ஜிஆர் பிரச்சாரத்துக்கு வரும்போது குழந்தைகளுடன் மக்கள் 3 நாட்கள் காத்திருப்பார்கள். அதேபோல் உதயநிதிக்காக மக்கள் காத்திருந்தனர்" என்றார். இப்படி பேசுகிறவர்கள் எல்லாம் உதயநிதியை வானளாவப் புகழ்வதைப் பார்த்தால், இது சட்டமன்றமா உதயநிதி ரசிகர் மன்றமா? என்று கேட்கத் தோன்றுகிறது.

தன் மகனை உச்சி முகரும் முதல்வர்.

சீனியரான பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஒருபடி மேலே போய், "ராமனுக்கு அனுமன் போல, ராஜராஜசோழனுக்கு ராஜேந்திர சோழன் போல, திமுக ஆட்சியமைக்க முதல்வருக்கு உறுதுணையாக இருந்தவர் உதயநிதி" என்றார். ஆனாலும் மனிதருக்குத் திருப்தி இல்லை போலும். "எம்ஜிஆர் சட்டமன்ற உறுப்பினராகி முதலமைச்சரானார். தொடர்ந்து மு.க.ஸ்டாலின் முதல் அமைச்சரானார். அந்த வரிசையில் தம்பி உதயநிதி சட்டமன்ற உறுப்பினராகியுள்ளார்" என்று பேசி திமுகவினரையே நெளியவைத்துவிட்டார்.

சட்டமன்றத்துக்கு வரும் திமுக எம்எல்ஏக்களில் பெரும்பாலானோர், வயது வித்தியாசம் பார்க்காமல் நேரடியாக உதயநிதியின் இருக்கைக்கே சென்று கும்பிடு போட்டுவிட்டுப் போகிற வீடியோ காட்சிகளும் வெளியாகியிருக்கிறது. அதேபோல வீடியோ கேமிரா முதல்வரைக் காட்டுகிற போதெல்லாம் பின்னணியில் உதயநிதி தெரிகிறார். அதாவது முதல்வர் முகம் தோன்றுகிற போதெல்லாம் பின்னணியில் உதயநிதி தெரிகிறபடி அவரை அமர வைத்திருக்கிறார்கள்.

இது எல்லாவற்றையும் மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

x