கரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது. அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளிலும் நாள் ஒன்றுக்கு 4000க்கும் அதிகமான கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பூதப்பாண்டி பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் இன்று தடுப்பூசி போடும் பணிகள் நடந்துவந்தது. இதற்காக முன்னரே டோக்கன் பெற்றிருந்த மக்கள் சமூக இடைவெளி விட்டு வரிசையில் காத்திருந்தனர். குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பலத்த காற்றும், லேசான மழையும் பெய்துவருகிறது. இந்நிலையில் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடுவதற்காக மக்கள் காத்திருந்த பகுதியில் மேற்கூரை காற்றில் பெயர்ந்து கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் பெரிய காயம் படவில்லை.
ஆனால், தடுப்பூசி போடவந்தவர்கள் மழைதூறலில் வரிசையில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேற்கூரையின் ஒரு பகுதி மட்டுமே விழுந்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. அந்த பகுதியில் உடனடியாக தரமான மேற்கூரை அமைக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.