உதயமானது திண்டுக்கல் மாநகர தமிழ்ச் சங்கம்


திண்டுக்கல் மாநகர தமிழ்ச் சங்க தொடக்க கூட்டம், அதன் தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பாலபாரதி தலைமையில் நடந்தது. சங்கத் தலைவர் மருத்துவர் அமலாதேவி, செயலர் பொறியாளர் சரவணன், பொருளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், குழந்தைகளிடம் தமிழ் வளர்க்க என்ன செய்ய வேண்டும்?, சமகாலத்து ஆய்வறிஞர்களை எப்படி வாழும் காலத்தே வாழ்த்திட வேண்டும்?, ஆபிரகாம் பண்டிதர் நினைவேந்தல் நிகழ்வை எப்படிச் சிறப்பாக ஆகஸ்டு 31 அன்று நிகழ்த்த வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. வ.உ.சி.யின் 150-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக தென்பகுதியில் இருந்து சென்னை செல்பவர்களுக்கான எழும்பூர் ரயில் நிலையத்துக்கு சிதம்பரானர் பெயர் சூட்ட வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டது.

தமிழ்ச் சங்கம் சார்பில் விருதுகள் வழங்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, வாழ்நாள் சாதனையாளர் விருதானது தமிழிசை ஆய்வாளர் நா.மம்மதுவுக்கும், சிறந்த களப்பணி புனைவு விருது சுளுந்தீ எழுதிய முத்துநாகுவுக்கும், சிறந்த மாற்றெழுத்தியல் விருது படுகைத்தழல் எழுதிய புலியூர் முருகேசனுக்கும், சிறந்த கட்டுரையாளர் விருது மதுரை என்.ராமகிருஷ்ணனுக்கும், சிறந்த கவிதாயினி விருது சக்திஜோதிக்கும் வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது. வருகிற 31-ம் தேதி (செவ்வாய்) ‘இசையும் தமிழும்‘ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது. திண்டுக்கல் பிச்சாண்டி கூட்டரங்கில் காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்வில் ‘இசையும் தமிழும்’ என்ற தலைப்பில் கவிஞர் யுகபாரதி உரையாற்றுவார். கூட்ட ஏற்பாடுகளை தமிழ் மென்பொருள் அறிஞர் துரைப்பாண்டி, சிபிஎம் கணேசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

திண்டுக்கல்லில் நடந்த மாநகர தமிழ்ச் சங்க தொடக்க கூட்டம்.

x