ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பு, இந்தியா பல்வேறு சமஸ்தானங்களாகவும், குட்டிக்குட்டி நாடுகளாகவும் இருந்தது நாம் அறிந்ததே. அப்படி தனி நாடாக, சமஸ்தானமாக இருந்த பகுதி புதுக்கோட்டை. 1640-ல் இருந்து 1948 வரையில் இந்த சமஸ்தானத்தை 9 மன்னர்கள் ஆட்சி செய்து வந்தார்கள். கடைசி மன்னரின் பெயர் ராஜா ராஜகோபால தொண்டைமான். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் விளைவாக நாட்டைவிட்டு வெளியேற முடிவெடுத்த ஆங்கிலேயர்கள், இந்தியாவை ஒரே நாடாக விட்டுச் செல்லாமல், இந்தியா, பாகிஸ்தான் என இரண்டாகப் பிரித்ததுடன் நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துக் கொட்டுவதுபோல சமஸ்தானங்கள் விரும்பிய நாட்டுடன் சேர்ந்து கொள்ளலாம், தனி நாடாக இருக்க விரும்பினால் இருக்கலாம் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.
அதன்படி இந்தியாவுடன் இணைய விரும்பாமல் தனி நாடாக இருந்த சமஸ்தானங்களில் ஒன்று புதுக்கோட்டை. 1948 மார்ச் 3-ம் தேதிதான் அது முறைப்படி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
1974-ல் திருச்சி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, தனி மாவட்டமான புதுக்கோட்டைக்கென 1951 முதலே தனி நாடாளுமன்றத் தொகுதியும் இருந்தது. தொகுதி மறு சீரமைப்பின்போது இந்தத் தொகுதி நீக்கப்பட்டதுடன், இதன் கீழிருந்த பல சட்டப்பேரவைத் தொகுதிகள் திருச்சி, சிவகங்கை போன்ற தொகுதிகளுடன் இணைக்கப்பட்டன. இதனால் ஒரு தனி நாடாக இருந்த புதுக்கோட்டை, ஒரு எம்.பி. கூட இல்லாத பகுதியாக மாறியது. இந்தச் சூழலில் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவரும், அறந்தாங்கி தொகுதியின் நீண்டகால எம்எல்ஏவுமான க.திருநாவுக்கரசர் புதுக்கோட்டை எம்பியானார். அதன் தொடர்ச்சியாக விரைவில் நடைபெற உள்ள ராஜ்யசபா உறுப்பினருக்கான தேர்தலில் திமுக சார்பில் புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லா வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். திமுகவின் பெரும்பான்மை காரணமாக இவரது வெற்றி உறுதியாகியுள்ளதால், இல்லாத புதுக்கோட்டைத் தொகுதிக்கு 2 எம்பிக்கள் கிடைத்திருப்பதாக மகிழ்கிறார்கள் அந்த மாவட்ட மக்கள்.