கோவை குதிரை வண்டி கோர்ட், கவர்னர் பங்களா புதுப்பிப்பு


குதிரை வண்டி கோர்ட்

கோவையில் நூறாண்டுகள் பழமையான குதிரை வண்டி கோர்ட் மற்றும் கவர்னர் பங்களா ஆகியவை பழமை மாறாது புதுப்பிக்கப்பட்டு, மறுசீரமைப்பு செய்து பயன்பாட்டுக்கு வர உள்ளக.

கோவையில் ரயில்வே ஸ்டேஷன் அருகில் கிட்டத்தட்ட நூறாண்டுகளாக செயல்பட்டு வந்தது பழைய முன்சீப் நீதிமன்றம். வாகன வசதிகள் இல்லாத காலத்தில் இங்கே அன்றாடம் பணிக்கு வரும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் எல்லாம் குதிரை வண்டியிலேயே வருவதால், இந்த நீதிமன்றத்தின் முன் பெருமளவு குதிரை வண்டிகளே பரபரப்பாக நின்று கொண்டும், ஓடிக் கொண்டுமிருக்கும்.

கவர்னர் பங்களா புதுப்பிப்பு

எனவே, இது குதிரை வண்டி கோர்ட் என்றே அழைக்கப்பட்டது. இந்த நீதிமன்றம் 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கலைக் கல்லூரி சாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு மாற்றப்பட்டதால், பழமையான குதிரை வண்டி கோர்ட் கட்டிடம் புதர் மண்டி காட்சியளித்தது. இரவு நேரங்களில் சமூக விரோதச் செயல்களும் நடைபெற்று வந்தது.

நகரின் மையப்பகுதியில் உள்ள இதை புனரமைத்து ஆக்கபூர்வமான பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்ற கோரிக்கையை 20 ஆண்டுகளாகவே மக்கள் எழுப்பி வந்தனர். அதேபோல் திருச்சி சாலையில் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்துக்கு பின்புறம் இருந்த பழங்கால கவர்னர் பங்களாவும் பயன்பாடு இன்றி புதர் மண்டியே காட்சியளித்தது.

இவையிரண்டும் இப்போது சீரமைத்து புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளை கோவை ஆட்சியர் சமீரன், சக அதிகாரிகள் புடைசூழ கடந்த செவ்வாயன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தற்போது பொதுப்பணித் துறை மூலமாக தமிழகம் முழுவதும் 29 பாரம்பரிய கட்டமைப்புகளை ஒரேநேரத்தில் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த 2 கட்டிடங்களிலும் மறுசீரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.60 ஏக்கர் பரப்பளவில் உள்ள குதிரைவண்டி கோர்ட் ரூ.9.01கோடி மதிப்பிலும், 14,947 சதுர அடியில் முதல் தளம் மற்றும் தரைத் தளத்துடன் கூடிய கவர்னர் பங்களா ரூ.10.25 கோடி மதிப்பிலும், புதுப்பித்து மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது! ’என இதை ஆய்வு செய்த அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

‘2 கட்டிடங்களையும் பழங்காலத்து நினைவுகளை போற்றும் வகையில், அவற்றின் பழமை மாறாமல் புதுப்பிக்கவும், இப்பணிகளை தரமாகவும் குறித்த காலத்திற்குள் விரைந்து முடிக்கவும்’ பொதுப்பணித் துறை அலுவலர்களை ஆட்சியர் சமீரன் கேட்டுக் கொண்டார்.

x