கூடுதல் வெளிநாட்டு விமானங்கள்


விமான நிலைய ஆய்வுக் கூட்டம்

கோவையில் பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு பீளமேடு பகுதியில் செயல்பட்டு வருகிறது. இது கோவைக்கு மட்டுமல்ல, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி என வரும் முக்கிய நகரங்களுக்கு செல்லும் விவிஐபிக்கள், தொழிலதிபர்கள் வந்து செல்லும் முக்கிய விமான நிலையமாக விளங்குகிறது.

இதன் அவசர அத்தியாவசிய தேவையை முன்னிட்டு இவ்விமான நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. விமான நிலையம் விரிவாக்க பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணி 24 கட்டங்களாக பிரிக்கப்பட்டு ஏறத்தாழ 628 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு விரைவில் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கான இழப்பீடு தொகையாக இதுவரை ரூ.29 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.1,390 கோடி நிதி போர்க்கால அடிப்படையில் பெற்று வழங்கப்பட உள்ளது.

இந்தப் பன்னாட்டு விமான நிலைய ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் விமான நிலைய அலுவலக கூட்டரங்கில் செவ்வாயன்று காலை நடைபெற்றது. கோவை எம்.பி., பி.ஆர். நடராஜன் தலைமையில், கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் முன்னிலையில் நடந்த இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மாநகர காவல் துணை ஆணையர் முத்துசாமி, பன்னாட்டு விமான நிலைய இயக்குநர் செந்தில்வளவன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியது:

சென்னையைப் போல அதிக அளவு வியாபார வர்த்தக வசதிகள் உடையது கோவை மாவட்டம். ஒரு சில வருடங்களில் மேலும் வளர்ச்சி அடையும். அதனை அடிப்படையாகக் கொண்டு, தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துகள் கேட்டு ஒரு நல்ல மாதிரியான விமான நிலையமாக உருவாக்கப்படும். பறவைகளின் தொல்லை நிரந்தரமாக நீக்க விமானநிலையம் மற்றும் அதன் அருகில் உள்ள இடங்களில் உள்ள கழிவுப்பொருள்கள் கொட்டுவது மாற்றி வேறு இடத்திற்கு மாற்றி அமைக்கப்படும்;.

வெளிநாட்டு வர்த்தகங்களை மேம்படுத்த தொழில் முனைவோர்களுடன் இணைந்து, கூடுதல் வெளிநாட்டு விமானங்கள் இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்;.மாநகரப் பேருந்து நிலையத்திலிருந்து விமானநிலையத்திற்கு ஒரு மணி நேர இடைவெளியில் பேருந்துகளை இயக்கவேண்டும். மேலும், பயணிகள் நிழற்குடைகளை விமானநிலையத்திற்கு அருகில் அமைக்க வேண்டும். மாநகரப் பகுதிகளிலிருந்து விமானநிலையத்திற்கான வழித்தடங்களில் போக்குவரத்துகளை முறையாக கண்காணிக்கவேண்டும். மேலும், பழுதடைந்துள்ள சர்வீஸ் சாலைகளை சீரமைக்க வேண்டும்!’’ என்று குறிப்பிட்டார்.

கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்தும், பணிகளை விரைந்து முடிக்கவும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

x