தஞ்சாவூரைச் சேர்ந்த இருவர், சம காலத்தில் இந்தியாவின் இரண்டு மாநிலங்களில் ஆளுநராக பதவி வகிக்கிறார்கள்.
மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக, தஞ்சையைச் சேர்ந்த பாஜகவின் மூத்த தலைவர் இல. கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தமிழகத்தின் அரசியல்வாதிகள் அனைவரும் பாரபட்சமில்லாமல் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், தஞ்சை மக்களுக்கு வேறு ஒரு பெருமிதமும் கிட்டியுள்ளது.
மேகாலயா மாநிலத்தின் ஆளுநராக தற்போது பதவி வகிக்கும் சண்முகநாதன் தஞ்சாவூரைச் சேர்ந்தவர் என்பதால், அவர்கள் கூடுதல் பெருமை கொள்கிறார்கள்.
சண்முகநாதன், இல. கணேசன் இருவருமே தஞ்சையில் உள்ள நாணயக்காரச் செட்டித் தெருவைச் சேர்ந்தவர்கள்தான்.
இரண்டு பேருமே, அங்குள்ள வீரராகவா மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்கள். இப்படி இந்திய வரலாற்றிலேயே, ஒரே ஊரைச் சேர்ந்த அதிலும் ஒரே தெருவைச் சேர்ந்த, ஒரே பள்ளியில் படித்த இருவர் நாட்டின் இரு மாநிலங்களின் ஆளுநர்களாக பதவி வகிப்பது தஞ்சைக்கு கிடைத்திருக்கும் தனிச்சிறப்பு.
தங்கள் மண்ணைச் சேர்ந்த இருவரும் சிறப்பாகச் செயல்பட்டு, தங்கள் மண்ணுக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறார்கள் தஞ்சை மக்கள்.