திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டப்படும் என்ற அறிவிப்பை ஆர்ப்பரித்து வரவேற்றிருக்கிறார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்.
“கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வரவேற் கிறேன். அவரைப் பற்றிய அனைத்துச் சிறப்பம்சங்களும் நினைவிடத்தில் இடம்பெற வேண்டும். எனது தந்தையாரும் தீவிர கருணாநிதி பக்தர். அவருடைய பெட்டியில் எப்போதும் கலைஞரின் 'பராசக்தி' பட வசனப் புத்தகம் இருக்கும்" என்றெல்லாம் ஓபிஎஸ் கொஞ்சம் ஓவராகவே திமுக புகழ்மாலை பாடியிருப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஓபிஎஸ் இப்படி பேசிய அதே நாளில், ‘தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு வரவேண்டிய மத்திய அரசு நிதியானது திமுக அரசின் நிர்வாகத் திறமை இன்மையால் கை நழுவிப் போகிறது’ என திமுக அரசுக்கு எதிராக காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான ஈபிஎஸ்.
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது பாஜக விசுவாசியாக தன்னைக் காட்டிக் கொண்ட ஓபிஎஸ், ஆட்சிக் கட்டிலைவிட்டு இறங்கியதுமே திமுக வுடனும் இணக்கமான போக்கை கடைபிடிக்க ஆரம்பித்தார். ஆட்சியின் குறைகளை ஈபிஎஸ் இடித்து இடித்துச் சொல்லிக் கொண்டிருக்க, ஓபிஎஸ்ஸோ, “இதையெல்லாம் சரிசெய்ய வேண்டும்” என கோரிக்கை வடிவிலேயே அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டி வருகிறார்.
ஆட்சியில் இருந்த போது, கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் தராமல் இழுத்தடித்தார் ஈபிஎஸ். இதையெல்லாம் மனதில் வைத்திருக்கும் திமுக தரப்பு ஈபிஎஸ்ஸை அரசியல் ரீதியாக ஆழமாகப் பழிதீர்க்க காய்நகர்த்தி வருகிறது. ஈபிஎஸ்ஸை நெருங்குவதற்கு முன்னதாக அவருக்கு ஆதரவாக இருக்கும் கொங்கு மண்டலத்து அதிமுக விஐபிக்களை வீழ்த்த திட்டம் தீட்டியிருக்கிறது திமுக. அதன்படியே முன்னாள் அமைச்சர்கள், எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினரின் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. அடுத்ததாக முன்னாள் அமைச்சர்கள், ஜெயக்குமார், தங்கமணி, சி.விஜபாஸ்கர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை பாயலாம் என்று சொல்லப்படுகிறது.
முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் அதேநேரம் ஒபிஎஸ் தரப்பு மீது திமுக அரசு மென்மையான போக்கையே கடைபிடித்து வருகிறது. ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் முட்டிக்கொண்டே இருந்தால் தான் அதிமுக சரிவிலிருந்து எழுந்திருக்க முடியாமல் தள்ளாடும். அதைப் பயன்படுத்தி தங்களை இன்னும் வலுப்படுத்திக் கொள்ளமுடியும் என கணக்குப் போட்டு அதற்கேற்ப காய்நகர்த்துகிறது திமுக.
இந்த நிலையில், கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கும் அறிவிப்பை பகிரங்கமாக ஆதரித்து ஓபிஎஸ் பேசியிருப்பது அதிமுகவுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கருணாநிதியின் பெயரைச் சொல்வதையே அதிமுககாரர்கள் அவ்வளவாய் விரும்பமாட்டார்கள். அப்படியிருக்க, தனது அப்பாவே கருணாநிதியின் அபிமானிதான் என ஓபிஎஸ் பேசியிருப்பது, தனக்கெதிரான ஊழல் வழக்கு நடவடிக்கையில் இருந்து தற்காத்துக் கொள்ளத்தான் என்று டீக்கடை வரைக்கும் பேசுகிறார்கள். அதேநேரம், ஓபிஎஸ்ஸின் இந்த நடவடிக்கையை கண்டிக்க முடியாமல் தடுமாறும் ஈபிஎஎஸ் தரப்பு, “இப்போது தெரிகிறதா... ஓபிஎஸ்ஸின் உண்மையான முகம்” என்று உள்ளுக்குள் பல்லைக் கடிக்கிறது.
எது எப்படியோ, இந்த விவகாரத்தில் திமுகவினர் மத்தியில் ஓபிஎஸ் நற்பெயரைச் சம்பாதித்திருக்கும் அதேநேரம் சொந்தக் கட்சிக்குள் தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது தான் நிஜம். இதைவைத்து இரண்டு அணிகளுக்கும் இடையில் இனி முட்டல் மோதல் தலை தூக்கும். திமுக அதை மேலும் கொம்பு சீவிவிட்டு வேடிக்கை பார்க்கும்!