சென்னை: பாஜக - அதிமுக கூட்டணி வைத்திருந்தால் தமிழகத்தில் திமுகவுக்கு ஒரு இடத்தில்கூட வெற்றி கிடைத்திருக்காது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட சாலிகிராமம் ஆற்காடு சாலை மெஜஸ்டிக் கார்டன் பகுதியில் பாஜக சார்பில் மக்கள் தொடர்புஅலுவலகத்தை நேற்று அவர் திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:
என் முகத்தை சமூக வலைதளத்தில் திமுகவினர் விகாரமாக பதிவு செய்திருக்கிறார்கள். திமுக இணையதள வாசிகளை முதல்வர் ஸ்டாலின் அடக்கி வைக்க வேண்டும். திமுக 40 எம்.பி.க்களை வைத்திருந்தாலும், அவர்களால் எதுவும் செய்ய முடியாது. தென்சென்னையில் பாஜகவுடன் இணைந்து பொது சேவை செய்வதற்காக அரசியல் அல்லாத ‘தென்சென்னையின் தோழர்கள்’ என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறோம்.
அரசியல் சார்பற்று பொது சேவை செய்ய விருப்பமுள்ள இளைஞர்கள் 9550999991 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தென்சென்னை தொகுதி பிரச்சினைகளை திமுக எம்.பி. சரி செய்யவில்லை என்றால், நானே களத்தில் இறங்கி போராடுவேன். எல்லாவிதத்திலும் அரசியலை இன்னும் தீவிரமாக எடுப்பேன். 2026 பாஜகவுக்கான களம். பாஜக - அதிமுக கூட்டணிவைத்திருந்தால், திமுக ஒரு இடத்தில்கூட வெற்றி பெற்றிருக்காது.
பாஜக, அதிமுக வாக்குகள் பிரிந்ததால்தான் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. மக்கள் மனதுதான் எனக்கு வேண்டிய சிம்மாசனம். அமைச்சர் பதவி அல்ல. அதிமுக என்ற பலம் பொருந்திய கட்சி பிரிந்திருக்காமல், இணைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
பிரேமலதா விஜயகாந்த் கூறியதுபோல, விருதுநகர் வாக்கு எண்ணிக்கையில் தவறு நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. மறு வாக்கு எண்ணிக்கை கேட்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.