அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமனம்


ஆளுநருடன் புதிய துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ்

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, முனைவர் ஆர்.வேல்ராஜை நியமித்துத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த எம்.கே.சூரப்பாவின் பதவிக்காலம் கடந்த ஏப்.11-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை. துணைவேந்தர் ஜெகதீஷ் குமார், சென்னை பல்கலை. முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி.தியாகராஜன், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஷீலா ராணி சுங்கத் ஆகியோரைக் கொண்ட தேடல் குழு அமைக்கப்பட்டது.

இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு நாடு முழுவதும் இருந்து 160 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அதில் 10 பேரை நேர்முகத் தேர்வுக்குத் தகுதியானவர்களாகத் தேடல் குழு இறுதி செய்தது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் 5 பேர், சென்னை ஐஐடியின் பேராசிரியர்கள் இருவர் ஆகியோர் உள்ளிட்ட 10 பேருக்கான நேர்காணல் ஆகஸ்ட் 9-ம் தேதி நடத்தப்பட்டது. இதில் இருந்து 3 பேர் கொண்ட பட்டியல் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதில் இருந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான முனைவர் ஆர்.வேல்ராஜை, அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமித்துத் தமிழக ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இவர் பொறுப்பேற்றதில் இருந்து 3 ஆண்டுகளுக்குத் துணைவேந்தராக இருப்பார்.

யார் இவர்?

ஆசிரியர் பணியில் 33 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் ஆர்.வேல்ராஜ். மெக்கானிக்கல் பிஎச்டி துறையில் 3 படிப்புகளை அறிமுகம் செய்தவர். முதுகலை பொறியியல் துறையில் 9 புதிய படிப்புகளை அறிமுகம் செய்திருக்கிறார். புதிய துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், அண்ணா பல்கலைக்கழகத்தில் இயக்குநர், துணை இயக்குநர், துறைத் தலைவர் என 14 ஆண்டுகள் நிர்வாகப் பணிகளிலும் இருந்துள்ளார்.

தமிழகப் பல்கலைக்கழகத்தில் தமிழரே துணைவேந்தராக நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில், தமிழரான முனைவர் ஆர்.வேல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

x