சென்னை: தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கத்தை மட்டுப்படுத்த நகர்ப்புற பசுமை கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு மற்றும் கிளைமேட் ட்ரெண்ட் அமைப்பு சார்பில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்ப அலை மற்றும் பருவமழை முறையில் மாற்றம் தொடர்பான தேசிய கருத்தரங்கு சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடைபெற்றது.
இணையவழி நிகழ்ச்சியில் இணைந்து, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியாசாஹு பேசியதாவது: வெப்ப அலையை உணர்வது என்பது ராக்கெட் அறிவியல் இல்லை. இயல்பாகவே அதை மக்களால் உணர முடியும். வெப்பஅலையின் தாக்கத்தை மட்டுப்படுத்த, குறைந்த விலையில் அரசின்வீடு கட்டும் திட்டத்தில் வீட்டின் மேல் தளத்தில் சோதனை முறையில் வெள்ளை சிலிக்கா பெயிண்ட் பூசி பார்த்தோம். அதன் மூலம் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைந்து இருந்தது.
வெப்ப அலையின் தாக்கத்தை மட்டுப்படுத்த நகர்ப்புற பசுமைகொள்கை, பசுமை தமிழ்நாடுஇயக்ககத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இது விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு பசுமை இயக்க இயக்குநர் ராகுல்நாத் பேசும்போது, கடந்த ஆண்டு தமிழகத்தில் வெப்பஅலையால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழக அரசு உருவாக்கி வரும் நகர்ப்புற பசுமை கொள்கை வெப்ப அலையின் தாக்கத்தை குறைக்க உதவும் என்றார்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் பேசும்போது, வெப்ப அலையை கணிப்பது இன்றும் சவாலாக உள்ளது. இருப்பினும் கணினி மாதிரிகள், தரவுகள் சேகரிப்பு மேம்படுத்தப்பட்டு 100 சதவீதத்தை ஒட்டி வெப்ப அலை வர இருப்பது கணிக்கப்படுகிறது. முழுமையாக 100 சதவீதம் கணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு திட்ட ஆணைய உறுப்பினர் செயலர் சுதாராமன், கிளைமேட் ட்ரெண்ட்ஸ் அமைப்பின் நிறுவன இயக்குனர் ஆர்த்தி கோஷ்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.