மாஞ்சோலை தோட்டத்தை அரசு கையகப்படுத்த டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்


டாக்டர் கிருஷ்ணசாமி | கோப்புப் படம்

தென்காசி: திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசின் தேயிலை தோட்ட கழகம் கையக்கப்படுத்தி, அங்குள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

தென்காசியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: "மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் கூலி உயர்வு பிரச்சினைக்காக புதிய தமிழகம் கடந்த பல ஆண்டுகளுக்குமுன் போராடியது. இதனால் அவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைத்தது. இங்குள்ள தொழிலாளர்களுக்கு இந்த தோட்டப் பகுதியை தவிர வேறுபூர்வீக இடம் கிடையாது. இந்நிலையில் இந்த தேயிலை தோட்டத்தை குத்தகைக்கு எடுத்துள்ள நிறுவனம், இங்குள்ள தொழிலாளர்களை முற்றிலும் வெளியேற்றும் தவறான நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுள்ளது.

குத்தகை காலம் முடிந்த பின்னர் அத்தனியார் நிறுவனம் வெளியேற வேண்டும். ஆனால் அங்குள்ள தொழிலாளர்களுக்கு வேலையிழப்பை ஏற்படுத்தக்கூடாது. அவர்களது வாழ்வாதாரத்தை இல்லாமல் செய்யக்கூடாது. ஆனால் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வுக்கான கையெழுத்தை நிறுவனம் பெற்று வருகிறது. இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். தொழிலாளர் சட்டத்துக்கு எதிரானது.தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கிறார்கள். எனவே தமிழக அரசு, தொழிலாளர் நல ஆணையரை அங்கு அனுப்பி இதை தடுத்து நிறுத்த வேண்டும்.

நிறுவனம் பெற்றுள்ள விருப்ப ஓய்வு கடிதங்களை திரும்ப பெறவேண்டும். கடந்த சில வாரங்களுக்கு முன் புதிய தமிழகம் நிர்வாகிகள் அங்கு சென்று நிலைமையை நேரில் கண்டறிந்து வந்துள்ளனர். மேலும் எங்கள் கட்சி சார்பில் ஒரு வழக்கறிஞர் குழுவினர் அங்கு செல்ல உள்ளனர். தமிழ்நாடு அரசின் தேயிலை தோட்ட கழகம் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை கையகப்படுத்த வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பேசவுள்ளேன்" என்று தெரிவித்தார்.