திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இங்கு உள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு மாற்றி அமைக்கப்பட்டு, உள் நோயாளிகளுக்கு சித்த மருத்துவ அடிப்படையான முக்குற்றம் மற்றும் உடல் தாது சம நிலை கொண்டு வரும் வண்ணம் திருத்தி அமைக்கப்பட்ட உணவு திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கல்லூரி முதல்வர் பேராசிரியர் மலர்விழி திருத்தியமைக்கப்பட்ட உணவை வழங்கி, இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், செவிலியர் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாற்றி அமைக்கப்பட்ட உணவுத் திட்டத்தின் கீழ் இன்று காலை உணவாக அவல், பனங்கருப் பட்டி மற்றும் பேரிச்சம்பழம் வழங்கப்பட்டது. மதிய உணவாக முருங்கைப் பொடி நல்லெண்ணெய், சாதம், சாம்பார், முட்டைக்கோஸ் பொரியல், கீரை பொரியல், மோர் வழங்கப்பட்டது. மாலை 4 மணிக்கு மூலிகை தேநீர், பாசிப்பயிறு வழங்கப்பட்டது இரவு உணவாக இட்லி மற்றும் சாம்பார் வழங்கப்பட உள்ளது.
வாரந்தோறும் திங்கட்கிழமை காலை உணவாக அவல், பனங்கருப்பட்டி பேரிச்சம் பழம், மதிய உணவாக தூதுவளை பொடி, நல்லெண்ணெய், சாதம், சாம்பார், கேரட் பொரியல், கீரை பொரியல், மோர், மாலை சிற்றுண்டியாக மூலிகை தேநீர், கொண்டைக் கடலை மற்றும் இரவு உணவாக இட்லி, சாம்பார் வழங்கப்பட உள்ளது. செவ்வாய் கிழமை காலை உணவாக பொங்கல், சாம்பார், வாழைப்பழம், மதிய உணவாக கருவேப்பிலை பொடி, நல்லெண்ணெய், சாதம், சாம்பார், பீன்ஸ் பொரியல், கீரை பொரியல், மோர் மற்றும் மாலை சிற்றுண்டியாக மூலிகை தேநீர், காராமணி சுண்டல், இரவு உணவாக இட்லி சாம்பார் வழங்கப்பட உள்ளது.
புதன் கிழமை காலை உணவாக காய்கறி ரவை கிச்சடி, சாத்துக்குடி அல்லது ஆரஞ்சு, பின் மதிய உணவாக சுண்டைவற்றல் பொடி, நல்லெண்ணெய், சாதம், சாம்பார், கோவைக்காய் பொரியல், கீரை பொரியல், மோர் மற்றும் மாலை சிற்றுண்டியாக மூலிகை தேநீர், கொண்டைக்கடலை மற்றும் இரவு உணவாக இட்லி சாம்பார் வழங்கப்பட உள்ளது. வெள்ளிக் கிழமை அன்று கருப்பு உளுந்து கஞ்சி, எள்ளுத் துவையல், சாத்துக்குடி காலை உணவாகவும் பிரண்டை பொடி, நல்லெண்ணெய், சாதம், சாம்பார், வெண்டைக்காய், பொரியல், கீரை பொரியல், மோர் மதிய உணவாகவும் மாலை சிற்றுண்டியாக மூலிகை தேநீர், கொண்டைக்கடலை மற்றும் இரவு உணவாக இட்லி சாம்பார் வழங்கப்பட உள்ளது.
சனிக் கிழமை காலை உணவாக திணைப் பொங்கல், சாம்பார், வாழைப்பழம், மதிய உணவாக அஷ்ட சூரணம், நல்லெண்ணெய், சாதம், சாம்பார், புடலங்காய் பொரியல், கீரை பொரியல், மோர் மற்றும் மாலை சிற்றுண்டியாக மூலிகை தேநீர், காராமணி சுண்டல், இரவு உணவாக இட்லி சாம்பார் வழங்கப்பட உள்ளது. ஞாயிற்றுக் கிழமை காலை உணவாக காய்கறி ரவை கிச்சடியும் வாழைப் பழமும் மதிய உணவாக நெல்லிக்காய் பொடி, நல்லெண்ணெய், சாதம், சாம்பார், அவரைக்காய் பொரியல், கீரை பொரியல், மோரும் மாலையில் மூலிகை தேநீர், பாசிப்பயிறும் இரவு உணவாக இட்லி சாம்பாரும் வழங்கப்படவுள்ளது.