சேலம்: கோவை - மங்களூரு இடையே கோடை கால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில் இருந்து சேலம், கோவை வழியாக கேரளா மற்றும் மங்களூருக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. கோடை காலம் என்பதால் இவ்வழித்தடத்தில் கோவை-மங்களூரு இடையே கோடை கால சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படவுள்ளது.
இதன்படி, மங்களூரு - கோவை வாராந்திர சிறப்பு ரயில் (06041) வரும் 18-ம் தேதி மற்றும் 25-ம் தேதி, ஜூன் 1,8,15,22,29-ம் தேதிகளில் (சனிக்கிழமை தோறும்) இயக்கப்படுகிறது. மங்களூருவில் காலை 9.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் காசர்கோடு, பையனூர், கண்ணூர், திரூர், சொர்ணூர், ஒட்டப்பாலம், பாலக்காடு வழியாக போத்தனூருக்கு மாலை 4.48 மணிக்கு வந்து, கோவையை மாலை 5.25 மணிக்கு வந்தடையும்.
மறுமார்க்கத்தில் கோவை - மங்களூரு ரயில் (06042) வரும் 18-ம் தேதி மற்றும் 25-ம் தேதி, ஜூன் 1,8,15,22,29-ம் தேதிகளில் கோவையில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு, போத்தனூருக்கு 10.28 மணிக்கும், பாலக்காட்டிற்கு நள்ளிரவு 12.10 மணிக்கும் சென்று கோழிக்கோடு, கண்ணூர் வழியே மங்களூருக்கு மறுநாள் காலை 6.55 மணிக்கு சென்றடையும். இந்த வாய்ப்பை பயணிகள் பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்த்து இனிய பயணம் மேற்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.