சென்னை: தமிழகத்திலும், தேசிய அளவிலும் இண்டியா கூட்டணி பெற்றுள்ள வெற்றியால் சர்வாதிகாரத்துக்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது. மேலும், சிறுபான்மை மக்களிடம் இருந்த அச்ச உணர்வு நீங்கியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு முதல்வர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகம் புதுச்சேரியில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியின் தோழமை கட்சிகளின் பங்களிப்புடன், நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளோம். இந்த வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்க்கிறது. கொள்கை உறுதியும், லட்சியப் பார்வையும், திட்டமிட்ட உழைப்பும், தெளிவான வியூகமும் இருந்தால் நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளையும் வெல்லவும் முடியும், அதன்மூலம் நாட்டை வழிநடத்தும் ஆற்றலுடன் செயல்படவும் முடியும் என்பதைதேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டியுள்ளன.
கடந்த 2022-ம் ஆண்டு விருதுநகர் முப்பெரும் விழாவில் ‘நாற்பதும் நமதே.. நாடும் நமதே’ என்ற முழக்கத்தை வைத்தேன். அப்போது முதல் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல், மக்களவை தேர்தல் பணிகளை பூத் வாரியாக திமுக மேற்கொண்டது.
மதவாதத்தையும் வெறுப்பு அரசியலையும் விதைக்க நினைப்பவர்கள் தமிழகத்தில் எப்படியாவது கால் ஊன்றி விடவேண்டும் எனத் திட்டமிட்டனர். வன்ம விதைகளைத் தூவி, வதந்தி நீர் ஊற்றி வளர்க்கப் பார்த்தனர். பிரதமர் 8 முறை தமிழகம் வந்து, திமுக மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்தார். மறுபுறம், அதிமுக தனித்து நிற்பதாகக் கூறி மறைமுகக் கூட்டணியாகச் செயல்பட்டது. இந்த இரண்டு சக்திகளும் தமிழகத்துக்கு எந்தளவு ஆபத்தானவை என்பதை எடுத்துரைப்பதே எனது பரப்புரை வியூகமாக அமைந்தது.
திமுக வெறுப்புப் பிரச்சாரம் செய்யவில்லை. பொறுப்பான முறையிலே தேர்தல் களத்தில் தன்கடமையை ஆற்றியது. மத்திய ஆட்சியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை வஞ்சித்ததையும், கடந்த 3 ஆண்டு திராவிடமாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், பயன்பெற்றவர்களை ஆதாரப்பூர்வமாக எடுத்துக்கூறினோம். இண்டியா கூட்டணியால் தான் பாசிசத்தை வீழ்த்தமுடியும் என்பதையும் சுட்டிக்காட்டினோம். மக்களின் நம்பிக்கைதான் இன்று முழுமையான வெற்றியாக விளைந்துள்ளது.
நாற்பதில், பாதியளவு தொகுதிகளில்தான் திமுக போட்டியிட்டது. மீதமுள்ள தொகுதிகள் தோழமைகட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. இத்தகைய ஒருங்கிணைப்புதான் 40 தொகுதிகளிலும் வெற்றியைச் சாத்தியமாக்கியிருக்கிறது.
இதற்குக் காரணமான தோழமை கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. திமுக அணி மீது முழுமையான நம்பிக்கை வைத்து, வெற்றியை அளித்த தமிழக வாக்காளர்களுக்கும் நன்றி.
மக்கள் நமக்கு மகத்தான வெற்றியைத் தந்திருக்கிறார்கள். அதைக் கொண்டாடுவது என்பது மக்களுக்கான நமது பணியின் மூலமாகத்தான் இருக்க வேண்டும். ஆர்ப்பாட்டக் கொண்டாட்டங்கள் தேவையில்லை. வாக்களித்த மக்களை நேரில் சென்று நன்றி தெரிவியுங்கள். அவர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்போம் என்ற உறுதியினை அளியுங்கள். தொகுதிக்கான தேவைகளை நிறைவேற்றப் பாடுபடுவதும், மாநிலத்தின் நலனைக் காக்கும் செயல்பாடுகளுமே உண்மையான வெற்றிக் கொண்டாட்டமாகும்.
தமிழகத்தில் 40-க்கு 40 வெற்றி என்பது இந்திய அரசியலில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மத்திய ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை என்பதைத்தான் தனிப்பெரும்பான்மை பெற முடியாத பாஜகவின் சரிவு காட்டுகிறது. மக்களவையில் சரிக்கு சரியாக இண்டியா கூட்டணி உறுப்பினர்கள் இடம்பெற இருப்பது ஜனநாயகம் கட்டிக் காக்கப்பட்டிருப்பதன் அடையாளமாகும்.
சர்வாதிகாரத்தனமான ஒற்றையாட்சி முறைக்கு மக்கள் ஆதரவாக இல்லை என்பதை மக்களவைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மக்களின் ஆன்மிக நம்பிக்கைகளை அரசியல் சுயலாபத்துக்குப் பயன்படுத்த நினைக்கும் மதவாதசக்திகளை, கோயில் கட்டிய மண்ணிலேயே இறை நம்பிக்கையுள்ள வாக்காளர்கள் வீழ்த்திக் காட்டியுள்ளனர். சிறுபான்மை மக்களின் நெஞ்சில் இருந்த அச்ச உணர்வு நீங்கியிருக்கிறது.
தமிழகத்திலும், தேசிய அளவிலும் இண்டியா கூட்டணி பெற்றுள்ள வெற்றியால் சர்வாதிகாரத்துக்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு வழங்கியுள்ள நெறிமுறைகளைப் பாதுகாக்கும் வகையில், நாட்டை வழிநடத்தும் பணியை இந்தியா கூட்டணி மேற்கொள்ளும். அதற்கு இந்த வெற்றி பெருந்துணையாக இருக்கும்.