குமரியில் கடந்த தேர்தலை விட பாஜக வாக்குகள் குறைந்ததால் தொண்டர்கள் அதிருப்தி


பொன் ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கணிசமான வாக்கு வங்கியை கொண்ட பாஜக இந்த மக்களவை தேர்தலில் 35 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்தியாவின் கடைகோடியில் உள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதி எப்போதும் அரசியல் நோக்கர்களால் உற்று கவனிக்கப்படும் தொகுதியாகும். நேற்று முன்தினம் கன்னியாகுமரி மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், பாஜக வேட்பாளர் பொன் ராதா கிருஷ்ணனை விட 1,79,907 வாக்குகள் அதிகம் பெற்று மீண்டும் வெற்றி பெற்றார்.

கடந்த தேர்தலில் இருவரும் போட்டியிட்ட நிலையில் விஜய் வசந்தின் வெற்றி வித்தியாசம் 1,37,950 வாக்குகள் ஆகும். கடந்த தேர்தலை விட அதி வாக்குகள் வித்தியாசத்துடன் வெற்றி பெற்றிருப்பதால் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதில் இருந்து 23 சுற்றுகளிலுமே காங்கிரசே முன்னிலை வகித்தது. பாஜக சார்பில் 10வது முறையாக போட்டியிட்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் 3,66,341 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபர் 52,721 வாக்குகளும், அதிமுகவின் பசிலியான் நசரேத் 41,393 வாக்குகளும் பெற்று டெபாசிட் இழந்தனர்.

இரு வேட்பாளர்களும் சேர்த்து ஒரு லட்சம் வாக்குகள் கூட பெறாத நிலையில், பாஜக, காங்கிரஸ் இடையே தான் போட்டி என்பது நிலவியது. சுயேட்சைகள் உட்பட 22 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் பொன் ராதா கிருஷ்ணனை தவிர அனைவரும் டெபாசிட் இழந்தனர். நோட்டாவிற்கு 3,756 வாக்குகள் பதிவானது.

வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 53 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். அவர் பெற்ற வாக்குகள் 5,46,248. அதே நேரம் பாஜகவிற்கு கடந்த தேர்தலை விட குறைவான வாக்குகளே கிடைத்துள்ளது. பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன் கடந்த தேர்தலில் 4,38,087 வாக்குகள் பெற்றிருந்தார். ஆனால் தற்போது பாஜக வாக்கு வீதம் 35 சதவீதமாக குறைந்துள்ளது. எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்காததால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.