குமரியில் 50,000 வாக்குகளை கூட பெறாத அதிமுக: கட்சித் தலைமை விசாரணை!


பசிலியான் நசரேத்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் அதிமுக 50,000 வாக்குகளை கூட பெறாததால் கட்சி தலைமை அதிருப்தியில் உள்ளது. அதிமுகவினர் கட்சி மாறி வாக்களித்தார்களா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 22 வேட்பாளர்கள் களத்தில் நின்றபோதும் பாஜக, காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் ஆகிய முக்கிய கட்சிகளிடையே தான் பிரதமான போட்டி என கருதப்பட்டது. குறிப்பாக அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத் 1 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெறுவார் எனவும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபர் கணிசமான வாக்குகளை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த வாக்குகள் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் இடையே வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவையாக இருக்கும் என கருதப்பட்டது.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அதிமுக மிக குறைவாக 41,393 வாக்குகள் மட்டுமே பெற்றது. நாம் தமிழர் கட்சி 52,721 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், 50,000 வாக்குகள் கூட அதிமுகவால் பெற முடியாமல் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் அதிமுக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதைப் போன்றே விளவங்கோடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் ராணி 5,267 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கடந்த கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் தனித்து அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜாண் தங்கம் 1,76,239 வாக்குகளை பெற்றிருந்தார்.

குமரி மாவட்டத்தில் அதிமுகவிற்கு கணிசமான வாக்குகள் இருந்தும், வாக்குகள் மிகவும் குறைவாக கிடத்திருப்பதால் குமரி அதிமுகவினரிடையே போதிய ஒருங்கிணைந்த தேர்தல் பணி இல்லாததால் அவர்கள் கட்சிமாறி வாக்களித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் அதிமுக மிக குறைவாக வாக்குகள் பெற்றிருப்பது கன்னியாகுமரி தொகுதியில்தான் என தெரியவந்துள்ளது. வாக்குகள் குறைவதற்கான உண்மை காரணம் குறித்து அதிமுக கட்சி தலைமை விசாரித்து வருகிறது.