மத்திய சென்னை: 2019 தேர்தலைப் போல 29 பேர் டெபாசிட் இழப்பு


சென்னை: மத்திய சென்னை தொகுதியில் கடந்த தேர்தலிலும் இந்தத் தேர்தலிலும் சொல்லிவைத்தது போல் 31 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இரண்டு தேர்தல்களிலும் முதல் 2 இடங்கள் பிடித்தவர்களைத் தவிர மற்ற 29 பேருக்கும் டெபாசிட் பறிபோனது.

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் ஸ்டார் தொகுதியான மத்திய சென்னை தொகுதியில் தான் மிகவும் குறைவான வாக்குகள் (53.96 சதவீதம்) பதிவானது. 31 வேட்பாளர்கள் களம் கண்ட இத்தொகுதியில் திமுக வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் 2 லட்சத்து 44 ஆயிரத்து 689 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் 1,69,159 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்தார்.

இவரைத் தவிர தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்பட 29 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். கடந்த 2019 தேர்தலில் 58.98 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த முறையும் இத் தொகுதியில் 31 பேர் போட்டியிட்டனர். அப்போதும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 4,48,911 வாக்குகள் பெற்று வென்றார். அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் எஸ்.ஆர்.சாம்பால் 1,47,391 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்தார்.

இவரைத் தவிர மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட கமீலா நாசர் (92,249 வாக்குகள்), நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் கார்த்திகேயன் (30,886 வாக்குகள்) உள்பட 29 பேரும் டெபாசிட் இழந்தனர். பொதுவாக, தேர்தலில் பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்குகளுக்கு மேல் பெற்றால் தான் டெபாசிட் தொகை திரும்பக் கிடைக்கும்.

கடந்த தேர்தலிலும் இத்தேர்தலிலும் மத்திய சென்னையில் 31 வேட்பாளர்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலில், யாருக்கும் வாக்களிக்க விரும்பமில்லாமல் பதிவிடப்படும் நோட்டாவுக்கு 13,822 பேர் வாக்களித்திருந்தனர். இத்தேர்தலில் 11,163 பேர் வாக்களித்திருந்தார்கள்.

x