பாபநாசம் அணையில் இருந்து கார் சாகுபடிக்கு நீர் திறப்பு: பாசனம் வசதி பெறும் 18,000 ஏக்கர் நிலம்


திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கார் சாகுபடிக்காக பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 18,090 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசனம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

திருநெல்வேலி மாவட்டத்தில் கார் சாகுபடி பணிகளுக்காக அணைகளின் நீர் இருப்பை பொருத்து ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும். அந்த வகையில் இவ்வாண்டும் சாகுபடி பணிகளுக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று கடந்த மாத இறுதியிலேயே விவசாயிகள் வலியுறுத்தினர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனுக்களை அளித்திருந்தனர். 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலையில் 75.95 அடியாக இருந்த நிலையில் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப் பட்டது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் ஷட்டரை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த் தேக்கங்களில் இருந்து தாமிரபரணி பாசனத்தின் கீழ் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய் (2260 ஏக்கர்), தெற்கு கோடைமேலழகியான் கால்வாய் (870 ஏக்கர்) நதியுண்ணி கால்வாய் (2460 ஏக்கர்), கன்னடியன் கால்வாய் (12500 ஏக்கர்) ஆகிய கால்வாய்கள் மூலம் மொத்தம் 18,090 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசனம் பெறும். 35 குளங்களில் தண்ணீர் பெருக்கப்படும். ஆயக்கட்டு நிலங்களுக்கு கார் பருவ சாகுடி மேற்கொள்வதற்காக, வரும் அக்டோபர் 2-ம் தேதி வரை 120 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்படும்.

இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகியவற்றை உள்ளடக்கிய வட்டங்கள் மற்றும் கிராமங்கள் பயன்பெறும். எதிர்வரும் நாட்களில் நீர்த்தேக்கங்களில் எதிர்பார்க்கின்ற நீர்வரத்து கிடைக்கப் பெறப்படாத பட்சத்தில் நீர்வளத்துறையினரின் வழிகாட்டுதலின்படி சுழற்சி முறையில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். நீர் விநியோகப் பணியில் நீர்வளத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) மதன சுதாகரன், இணை இயக்குநர் (வேளாண்மை) முருகானந்தம், துணை இயக்குநர் (வேளாண்மை) கிருஷ்ணகுமார், உதவி செயற்பொறியாளர் அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.