குன்னுார்: குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் பயிற்சி பெற்ற 841 அக்னி வீரர்கள் இன்று சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் குன்னுார் வெலிங்டனில் பழமை வாய்ந்த மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் (எம்ஆர்சி), இளைஞர்களுக்கு அக்னி வீரர்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு 31 வார கடும் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த, 3வது அணியில் 841 அக்னி வீரர்களின் சத்திய பிரமாண நிகழ்ச்சி பேரக்ஸ் நாகேஷ் சதுக்கத்தில் இன்று நடந்தது. இதையொட்டி ராணுவ பேண்ட் வாத்திய குழுவினர் தேச பக்தி பாடல்களை இசைக்க, தேசிய கொடி மற்றும் எம்ஆர்சி கொடி கொண்டுவரப்பட்டது.
வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட எம்ஆர்சி கமாண்டன்ட் பிரிகேடியர் சுனில் குமார் யாதவ், பயிற்சியில் சிறந்து விளங்கிய, 6 வீரர்களுக்கு பதக்கம் மற்றும் கேடயங்கள் வழங்கினார். ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பதற்கேற்ப, உப்பு உட்கொண்ட பிறகு, பகவத் கீதை, பைபிள், குரான் புத்தகங்கள் மற்றும் தேசியக் கொடி மீது அக்னி வீரர்கள் சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, அக்னி வீரர்கள் பெற்றோர் உறவினர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.