ஸ்ரீபெரும்புதூர்: ராணுவ வீரர்கள், முதியோர்கள் அளித்த தபால் வாக்குகளில் 447 செல்லாதவை


பிரதிநிதித்துவப் படம்

தாம்பரம்: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் ராணுவ வீரர்கள், அரசு ஊழியர்கள், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் அளித்த தபால் வாக்குகளில் 447 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6,001 தபால் வாக்குகள் பதிவாகின. இதில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 2,940 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 1,033 வாக்குகளும், தமாகா வேட்பாளர் வேணுகோபால் 927 வாக்குகளும் பெற்றனர். மேலும், நாம் தமிழர் வேட்பாளர் ரவிச்சந்திரனுக்கு 302 வாக்குகளும், நோட்டாவுக்கு 156 வாக்குகளும் பதிவாகி இருந்தன. அத்துடன் 447 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் ராணுவ வீரர்கள் 164 பேர் வாக்கு அளித்தனர். அதில் 50 வாக்குகள் செல்லாதவையாகும். முதியோர், மாற்றுத் திறனாளிகள் 2,501 பேர் வாக்களித்தனர். இதில் 106 வாக்குகள் செல்லாதவையாகும். இதில்லாமல் அரசு ஊழியர்களின் கவனக்குறைவாலும் அதிகளவில் செல்லாத வாக்குகள் பதிவாகி உள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அனுமதிக்கப்பட்டதால் அவர்களும் தவறு செய்திருக்காலம் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக, சரியாக முத்திரை பதிக்கப் படாதது, அதிகாரிகள் கையெழுத்து இல்லாதது என பல காரணங்களால் அந்த வாக்குதள் செல்லாதவையாகியுள்ளன.

இது குறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது, “தபால் வாக்குக்கான கவருக்குள் உறுதிமொழி படிவமும், வாக்குச்சீட்டும், இரு சிறிய கவர்களில் தனித்தனியாக இருக்கும். உறுதிமொழி படிவத்தில் வாக்காளர் பெயர், அவரின் கையெழுத்து, அங்கீகரிக்கும் அதிகாரியின் கையெழுத்து வாக்குச் சீட்டின் வரிசை எண் போன்ற விவரங்கள் இருக்க வேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்று இல்லை அல்லது சரியாக இல்லை என்றாலும், உறுதி மொழி படிவம் ஏற்கப்படாது.

உறுதி மொழி படிவம் ஏற்கப்படாத நிலையில் அவரது தபால் வாக்குக்கான கவர் பிரிக்கப்படாமல், தகுதியற்றதாக அறிவிக்கப்படும். உறுதி மொழி படிவத்தில் அனைத்தும் சரியாக இருந்தால் வாக்குச் சீட்டுக்கான கவர் பிரிக்கப்படும். வாக்குச்சீட்டில் வாக்கு பதிவாகாமல் இருந்தாலோ ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பதிவு செய்திருந்தாலோ வாக்குச் சீட்டு கிழிந்து நனைந்து இருந்தாலோ ஏற்கப்படாது. வாக்குச் சீட்டு உரிய கவருக்குள் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு வைக்கப்படாமல் வேறு கவருக்குள் இருந்தாலும் அந்த வாக்கு செல்லாததாக அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

x