“நாட்டை ஆள தகுதியில்லாதவர் பிரதமர் மோடி” - நாராயணசாமி விமர்சனம்


புதுச்சேரி: புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு பெண்கள் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “காங்கிஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றியை தெரிவிக்கின்றோம்.

இண்டியா கூட்டணியை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாங்கள் எப்போதும் நன்றிகடனாக இருப்போம். இந்த தேர்தல் பணம் பலத்துக்கும், அதிகார பலத்துக்கும், மக்களுக்கமான தேர்தல். மக்கள் எங்கள் பக்கம் இருந்து எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்திருக்கிறார்கள். பணபலத்தையும், அதிகார பலத்தையும் தூக்கி எறிந்திருக்கிறார்கள்.

ஆட்சியில் உள்ளவர்கள் படுதோல்வி அடைந்திருக்கிறார்கள். நரேந்திர மோடி, நமச்சிவாயத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தாமரை சின்னத்தை மக்கள் ஒதுக்கி வெறுத்திருக்கிறார்கள். புதுச்சேரி மாநில மக்கள் ஊழல்வாதிகளை தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்பது இந்த தேர்தல் முக்கிய உதாரணம்.

பண பலத்துக்கும், அதிகார பலத்துக்கும் மக்கள் மயங்கவில்லை. மக்களோடு மக்களாக இருக்கின்ற இண்டியா கூட்டணிக்கு வாக்களித்திருக்கிறார்கள். இது ஊழல்வாதிகளுக்கு மிகப்பெரிய பாடம். 2016-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக நமச்சிவாயத்தை சோனியா காந்தி நியமித்தார்.

அந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றோம். அப்போது நான் முதல்வராக வேண்டி எம்எல்ஏக்கள் பரிந்துரை செய்த போது என்னை எதிர்த்து நமச்சிவாயம் போட்டியிட்டார். 15 எம்எல்ஏக்களில் 14 பேர் எனக்கு வாக்களித்தனர்.

ஆனால் அப்போது தன்னால்தான் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது என்று மக்கள் மத்தியில் நமச்சிவாயம் சொன்னார். இந்த தேர்தலில் அவர் சொன்னது பொய் என்று தெளிவாக தெரிகிறது. நமச்சிவாயத்தை மக்கள் புறக்கணித்திருக்கிறார்கள்.

நமச்சிவாயம் ஊழல் பேர்வழி என்று மக்கள் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள். இதற்கு ரங்கசாமியின் ஆட்சியும் காரணம். அவரது ஆட்சியில் முதல்வரில் இருந்து அமைச்சர்கள் வரை அனைவரும் ஊழல் பேர்வழிகள். இதனை நாங்கள் தொடர்ந்து கூறி வருகின்றோம்.

முதல்வர் ரங்கசாமி துறையிலேயே ஊழல் நடக்கிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து மக்கள் ஆட்சியாளர்களை ஒதுக்கியிருக்கியிருக்கிறார்கள். ரங்கசாமி மற்றும் அவரது அமைச்சரவையில் உள்ள 5 அமைச்சர்களும் தார்மீக பொறுப்பேற்று உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.

பிரதமர் நரேந்திரமோடி மத்தியில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் படுதோல்வி அடையும், எதிர்கட்சி அந்தஸ்து பெறாது, அது இஸ்லாமியர்களுக்கான கட்சி, ராமர் கோயிலை இடித்துவிடும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்தார்.

ஆனால் பிரதமரின் நிலை இன்று பரிதாபமாக இருக்கிறது. அவர்கள் 238 தொகுதிகளில் மட்டும் தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களால் அறுதி பெறும்பான்மை கூட பெற முடியவில்லை. நரேந்திர மோடி, அமித்ஷாவின் அராஜகம், எதிர்கட்சிகளை திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கையால் தான் இந்த நிலை.

பாஜக ஊழல் நிறைந்த கட்சி என்று மக்கள் முடிவு செய்திருக்கிறார்கள். நரேந்திரமோடி மறுபடியும் பிரதமராக வருவதற்கு தகுதியில்லாதவர். மோடி, அமித்ஷா இருவரும் உடனடியாக பொறுப்பேற்று தங்களுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பாஜக இந்த தோல்விக்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.

மற்ற கட்சிகளை நம்பி ஆட்சி செய்யும் நிலை பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கிறது. பாஜக தலைமையை நான் கேட்டுக்கொள்வதெல்லாம் மோடியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு அவரை வீட்டுக்கு அனுப்புங்கள்.

மோடி இந்த நாட்டை ஆள தகுதியில்லாதவர். அவரால்தான் தோல்வியுற்றுள்ளீர்கள். பாஜக இனிமேல் இந்த நாட்டில் எடுபடாது” இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

x