நெல்லையில் 15 ஆண்டுகளுக்குப் பின் வெற்றிவாகை சூடிய காங்கிரஸ்!


திருநெல்வேலி: திருநெல்வேலி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றுள்ளார். 15 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் இத்தொகுதி காங்கிரஸ் வசம் சென்றுள்ளது.

திருநெல்வேலி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராபர்ட் புரூஸ், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், அதிமுக சார்பில் ஜான்சிராணி, நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யா உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த தொகுதிக்கு உட்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஆலங்குளம், நாங்குநேரி, அம்பாசமுத்திரம், ராதாபுரம் ஆகிய சட்டப் பேரவை தொகுதிகளிலும் 16,50, 532 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது 10, 60, 461 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு சதவிகிதம் 64.10 ஆகும்.

பதிவான வாக்குகளை எண்ணும் பணி திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதல் அரைமணி நேரத்துக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 8.30 மணிக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும்பணி தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கைகாக சட்டப் பேரவை தொகுதிகள் வாரியாக 14 மேஜைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் ஒவ்வொரு சட்டப் பேரவை தொகுதிக்கும் தலா 51 பணியாளர்கள் வீதம் மொத்தம் 306 பணியாளர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 23 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்பட்டது.

ஒவ்வொரு சுற்றாக முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் தொடக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 1,65,620 வாக்குகள் வித்தியாசத்தில் ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர் மொத்தம் 5,02,296 வாக்குகளை பெற்றுள்ளார்.

அவருக்கு அடுத்ததாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 3,36,676 வாக்குகளுடன் 2-ம் இடமும், அதிமுக வேட்பாளர் ஜான்சிராணி 89,601 வாக்குகளுடன் 3-ம் இடமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 87686 வாக்குகளுடன் 4-ம் இடமும் பெற்றுள்ளனர்.

பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு சதவிகிதம் வாக்குகளை கூட பெறவில்லை என்பதால் அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

இத்தொகுதியில் கடந்த 2009 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.எஸ். ராமசுப்பு வெற்றி பெற்றிருந்த நிலையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் இத்தொகுதி காங்கிரஸ் வசம் சென்றுள்ளது.

x