“தாமரை மலர்ந்தே தீரும் என்று பகல் கனவு கண்ட தமிழிசைக்கு பாடம் புகட்டிய மக்கள்” - புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா


புதுச்சேரி: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பாசிசம் வெள்ளும், தாமரை மலர்ந்தே தீரும் என்று பகல் கனவு கண்ட தமிழிசை போன்ற ஊர்க்குருவிகளுக்கு தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டி இருக்கிறார்கள், மக்கள் விரோத பாசிச பாஜக தமிழ் மண்ணில் வேரறுக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக மாநில அமைப்பாளருமான இரா.சிவா கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தியா கூட்டணி 40 தொகுதியையும் கைப்பற்றி இருப்பது குறித்து அவர் கூறியதாவது: மக்களவைத் தேர்தல் பணியை தொடங்கிய போது தமிழக முதல்வர் இரு தத்துவங்களுக்கு இடையிலான போர்க்களம் என்று அறிவுறுத்தினார். அதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள இடங்கள் 40ம் நமதே, நாடும் நமதே என்ற முழக்கத்தை முன்னெடுத்து, அதை வென்றெடுக்கும் முயற்சிகளில் கடுமையாக உழைத்து இந்த வெற்றியை ஈட்டியிருக்கிறார்.

அதன் பிரதிபலிப்புதான், புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் இண்டியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட வைத்திலிங்கம், புதுச்சேரி மாநிலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக கோளோச்சி வந்த பாஜக – என்.ஆர் காங்கிரசின் ஆட்சியை எதிர்த்து மக்கள் செல்வாக்கோடு இந்த மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறார். இந்த வெற்றியின் பின்னணியில் தமிழக முதல்வரின் தேர்தல் பயணத்தில் புதுச்சேரியில் நிகழ்த்திய சிறப்பான பரப்புரையும், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் சந்திப்புகள் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கியது.

தமிழக முதல்வர் எண்ணப்படி, தமிழ்மண்ணில் பாசிசம் வீழ்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பாசிசம் வெள்ளும், தாமரை மலர்ந்தே தீரும் என்று பகல் கனவு கண்ட தமிழிசை போன்ற ஊர்க்குருவிகளுக்கு தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டி இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக எம்பி வைத்திலிங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.