நா.கோகிலன்
na.kokilan@gmail.com
கோயில் பூசாரி என்றாலே யாருக்குமே ஒரு வித பயம் வரும். எங்கள் ஊர் முனீஸ்வரன் கோயில் பூசாரிக்கும் அப்படியான பயம் காட்டும் முகம்தான். ஆட்டுக்கொம்பு மாதிரி முறுக்கிய பெரிய மீசை. முகத்தை விட்டு வெளியே குத்துகிற மாதிரி நீண்டிருக்கும் வால் நட்சத்திரக் கண்கள், அகலமான நெற்றி, நெற்றியை மறைக்கும் திருநீறு, மத்தியில் நெற்றிக் கண் வடிவில் குங்குமக் கோடு… அசப்பில் முனீஸ்வரன் சிலையே எழுந்து வந்ததுபோல் இருப்பார்.
அவரைப் பார்த்தால் பயம் வருவதற்குக் காரணம் அவரது உருவம் மட்டும் அல்ல. அவர் வசூலிக்கும் கந்து வட்டியும்தான். ஊரில் பலருக்கும் கடன் கொடுத்து வட்டி வாங்குகிறார். கடன் வாங்கியவர்களின் பட்டியலில் என் அப்பாவும் உண்டு.
முனீஸ்வரனுக்கு ஞாயிற்றுக்கிழமை என்றால் நிறைய பக்தர்கள் சேர்ந்துவிடுவார்கள். ஆட்டுக் கிடாய்களைப் பலியிடுவார்கள். கண்கள் மருள நின்றுகொண்டிருக்கும் அந்தக் கிடாய்களைப் பார்க்கும்போது, பூசாரியிடம் வட்டிக்குக் கடன் வாங்கிய அப்பாவிகளின் நினைவு வரும். அப்பாவும் ஒரு பலியாடுதான்!
பூசாரியிடம் வாங்கிய கடனை எண்ணியே அப்பா குறுகிப்போனார். கோயிலுக்குப் போகும் வழியில்தான் எங்கள் வீடு. வட்டி கொடுக்க தாமதமாகும் சமயங்களில், போகும்போதும் வரும்போதும் சத்தம் போட்டுவிட்டுதான் நகருவார் பூசாரி.
அக்காவின் திருமணத்துக்காக அவரிடம் பத்து வட்டிக்குக் கடன் வாங்கியிருந்தார் அப்பா. அக்காவுக்கு இரண்டு குழந்தைகளும் பிறந்து, கோசா ஆஸ்பத்திரியில் குடும்பக் கட்டுப்பாடும் செய்தாகிவிட்டது. ஆனால், வட்டி மட்டும் குட்டிகளைப் போட்டுக்கொண்டிருந்தது.