காஞ்சிபுரம் மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் 750 போலீஸார்


காஞ்சிபுரம்/திருவள்ளூர்: காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் பணியில் 950 அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். இந்தப் பணியையொட்டி 750 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.

இந்தத் தொகுதிகளுக்கு உட்பட்டதேர்தல் முடிந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் காஞ்சிபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.

மேலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அவ்வப்போது வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குச் சென்று ஆய்வு செய்து வருகிறார்.

இந்த வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி (இன்று) நடைபெறுகிறது. காலை 8 மணிக்குவாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் 8.30மணி முதல் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

அடையாள அட்டை அவசியம்: இந்த வாக்கு எண்ணும் பணியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என மொத்தம் 950 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 5 துணை கண்காணிப்பாளர்கள் உட்பட மொத்தம் 750 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் மட்டுமே மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர்.

வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க மொத்தம் 293 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்கு எண்ணும் அறையிலும் சுழலும் தன்மை கொண்ட 360 டிகிரி கேமரா ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக ஒவ்வொரு சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

செங்கல்பட்டு சட்டப்பேரவைத் தொகுதி-31 சுற்றுகள், திருப்போரூர் -22 சுற்றுகள், செய்யூர் -18 சுற்றுகள், மதுராந்தகம்-19 சுற்றுகள், உத்திரமேரூர்-21 சுற்றுகள், காஞ்சிபுரம்-23 சுற்றுகள் என வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 6 சட்டப்பேரவைத் தொகுதிக்கும் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்தபிறகே காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கான முதல் சுற்று முன்னணி நிலவரம் அறிவிக்கப்படும்.

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை பணியில், 712 வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், 201 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள், 102 நுண்பார்வையாளர்கள் என மொத்தம் 1,015 பேர் ஈடுபட உள்ளனர்.

x