வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் ஏற்பட்டால் குடியரசு தலைவரும், உச்ச நீதிமன்றமும் தலையிட வேண்டும்: முன்னாள் நீதிபதிகள் அவசர கடிதம்


சென்னை: நேர்மையான தேர்தல் ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் வகையில் வாக்கு எண்ணி்க்கையின்போது இடர்பாடுகள், குளறுபடிகள் ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமை தேர்தல் ஆணையர் உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் அவசர கடிதம் அனுப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளான ஜி.எம்.அக்பர் அலி, அருணா ஜெகதீசன், டி.அரிபரந்தாமன், பி.ஆர்.சிவக்குமார், சி.டி.செல்வம், எஸ்.விமலா மற்றும் பாட்னா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ் ஆகியோர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆகியோருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது: நாங்கள் அனைவரும் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள். எந்த அரசியல் கட்சிகளையும் சாராதவர்கள். ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள லட்சியங்களுக்கும், தேர்தல் ஜனநாயகத்தின் மாண்புகளுக்கும் மதிப்பளிக்க கடமைப்பட்டவர்கள்.

அதிக மக்கள் தொகை கொண்டநம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் 18-வதுமக்களவைத் தேர்தல் வாக்குஎண்ணிக்கை என்ற இறுதிகட்டத்தை அடைந்துவிட்டோம்.

கோடை வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயககடமையை மக்கள் நம்பிக்கையுடன் ஆற்றியுள்ளனர்.

தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்தும் கடினமானபொறுப்பை அரசியலமைப்பு சட்டப்பிரகாரம் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது என்றாலும், தேர்தல் நேரங்களில் நடைபெற்ற சில கசப்பான சம்பவங்கள் தேர்தல் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

தற்போதைய ஆளும் அரசு ஒருவேளை தோல்வியடைய நேரிட்டால் அதிகார மாற்றம் சுமூகமாகஇருக்காது மற்றும் அரசியலமைப்பு நெருக்கடியும் ஏற்படலாம். தேர்தல் தொடர்பான விதிமீறல்கள், புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த முறை சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புபேச்சுக்கள் அதிகளவில் இடம்பெற்றன. வாக்குப்பதிவு விவரங்கள் உடனுக்குடன் முறையாக வெளியிடப்படவில்லை. ஒருவேளை தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் குதிரை பேரத்துக்கு வழிவகுத்துவிடும்.

எனவே நேர்மையான தேர்தல்ஜனநாயகம் காக்கப்பட வேண்டுமெனில், அரசியல் சாசனத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்ககுடியரசுத் தலைவரும், வெளிப்படையான தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஏதேனும் பிரச்னைகள், இடர்பாடுகள், குளறுபடிகள் ஏற்பட்டால் அதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் தலையிட்டு பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

தேர்தல் முடிவுகள் காரணமாக ஏதேனும் அரசியல் சாசன சிக்கல்கள்எழுந்தால் அதை உடனடியாக தீர்க்கும் வகையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஒருவேளை எங்களது அச்சங்கள் தவறாகி, வாக்குகள் நேர்மையாக எண்ணப்பட்டு, நியாயமான முறையில் முடிவுகளை அறிவித்து மக்களின் விருப்பப்படி நாடாளுமன்றத்தை அமைப்பதன் மூலம் தேர்தல் சுமூகமாகமுடிவடையும் என நாங்கள் நம்புகிறோம். ஆயினும் கூட வரும்முன் காப்பது சிறந்தது என்பதை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

x