சென்னை: ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் வாயிலாக டிக்கெட் பெறும் வசதி சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
சென்னை ரயில்வே கோட்டத்தில் 63 இடங்களில் 128 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் இருக்கின்றன. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக, இதை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,
அதன்படி, சென்னை ரயில்வே கோட்டத்தில் தாம்பரம், மாம்பலம், வேளச்சேரி, கிண்டி, எழும்பூர், பெரம்பூர், மயிலாப்பூர், சேப்பாக்கம் உட்பட 42 ரயில் நிலையங்களில் 100 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த இயந்திரம் மூலமாக டிக்கெட் வழங்க ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள், தனி நபர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், அரக்கோணம், ஆவடி, செங்கல்பட்டு, பெரம்பூர், மாம்பலம், கூடுவாஞ்சேரி உள்பட 42 ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் மூலமாக டிக்கெட் வழங்கும் உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இவர்கள் விற்பனை செய்யும் டிக்கெட்களின் மொத்த மதிப்பில் 3 சதவீதம் ஊதியமாக வழங்கப்படும். இவர்களுக்கு ரயில்வே ஊழியர்களுக்கு கிடைக்கும் அரசு சலுகைகள் எதுவும் கிடைக்காது. ஆர்வம் உள்ளவர்கள் www.sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 20-ம் தேதி மதியம் 3 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.