மதவாத சிவ சேனையை காங்கிரஸ் ஆதரிக்கலாமா? - பதில் சொல்கிறார் பீட்டர் அல்போன்ஸ்


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

தொடர் தோல்விகளாலும், கை நழுவிய வெற்றிவாய்ப்புகளாலும் துவண்டுகிடந்த காங்கிரஸ் கட்சிக்கு ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது மகாராஷ்டிரத்தில். சோர்ந்து கிடந்த காங்கிரஸார் இனம் புரியா மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். மறுபுறம், ‘மதவாதப் பின்னணி கொண்ட சிவ சேனையுடன் காங்கிரஸ் கைகோக்கலாமா?” என்ற விமர்சனமும் எழுகிறது. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் என்ன சொல்கிறார்? பேசலாம்.

மகாராஷ்டிரத்தின் பாஜக ஆடு -புலியாட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 வலதுசாரி மதவாத அரசியலை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளே இங்கில்லை என்கிற சூழ்நிலையை மகாராஷ்டிர அரசியல் களம் மாற்றியமைத்திருக்கிறது.  அண்மை
யில் ஏழெட்டு மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக ஜெயித்தாலும் சரி, ஜெயிக்காவிட்டாலும் சரி, முதல்வர் அவர்களுடைய ஆள்தான் என்ற நிலையே இருந்தது. அதை இப்போது மாற்றியிருக்கிறோம். அந்த வகையில் இது வரவேற்கக்கூடிய நிகழ்வு. ‘நாங்கள் வித்தியாசமானவர்கள், ஊழலுக்கு எதிரானவர்கள்’ என்று சொன்ன பாஜகவின் முகமூடியும் முழுமையாகக் கிழிந்திருக்கிறது. அரசியல்வாதிகளின் பலவீனங்களை எப்படியெல்லாம் பயன்படுத்தினார்கள், குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து ஆளுநர் அலுவலகம் வரையில் எல்லோரையும் தங்கள் சுட்டு விரலால் எப்படி ஆட்டுவித்தார்கள் என்பதெல்லாம் இன்று வெட்டவெளிச்சமாகிவிட்டன.

 மதவாதத்தோடு இனவாதமும் பேசுகிற சிவ சேனையுடன் கூட்டணி அமைப்பது காங்கிரஸுக்கு உவப்பானதா?

 25 ஆண்டுகால இந்திய நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றைப் பார்த்தவர்களுக்கு இந்தக் கூட்டணிக்குப் பின்னால் இருக்கின்ற நியாயம் புரியும். 1967-க்குப் பிறகு மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி ஒரே கட்சி பெரும்பான்மை பெற முடியாத நிலையில், கூட்டணி ஆட்சியை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கிவைத்த வெற்றிகரமான கூட்டணி ஆட்சி முறையானது, பிறகு வாஜ்பாய் காலத்தில் மத்தியிலும் வெற்றிகரமாக 5 ஆண்டுகளைப் பூர்த்தி செய்தது. இது கொள்கை சார்ந்த கூட்டணி இல்லை என்றாலும், செயல்திட்டங்களின் அடிப்படையிலான கூட்டணி. வாஜ்பாய் காலத்தில் பாஜக கூட்டணியில் சோஷலிஸ்ட்களும், திராவிட இயக்கத்தினரும், தலித் விடுதலை அரசியல் பேசுவோரும் இருந்தார்கள். கடந்த காலங்களில் பாஜகவானது மதச்சார்பற்ற கட்சிகளைத் தனது கூட்டணியில் சேர்த்து அவர்களையும் மதவாத சக்திகளாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.
இன்றைக்கு அந்த நிலை மாறி, வலதுசாரி மதவாதக் கட்சிகள் மதச்சார்பற்ற சக்திகளுடன் சேர்ந்து மதச்சார்பற்ற சக்திகளாக மாறும் வாய்ப்பும் வந்திருக்கிறது. இது பெருமைதானே?

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் குறித்து காங்கிரஸின் கருத்து என்ன?

மேய்ப்பனின் மீது கோபம் கொண்ட ஆடுகள், ஓநாய்களுக்கு வாக்களித்திருக்கின்றன. ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்கள், இதைப் போன்ற வன்முறைகளை எதிர்கொள்வதற்கு இன்னொரு வன்முறையாளர்தான் தேவை என்ற முடிவுக்கு மக்களைக் கொண்டுவந்திருக்கின்றன.

 ஈழத் தமிழர்களின் இன்றைய நிலைக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்கும் திமுக - காங்கிரஸ் கூட்டணிதான் காரணம் என்று சீமான் போன்றவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டுகிறார்களே?

 காங்கிரஸ் - திமுகவைக் குறை சொல்கிற தலைவர்கள் தங்கள் நெஞ்சறிய பொய் சொல்கிறார்கள். நம்முடைய நாட்டிற்குள் நடக்கிற ஒரு நிகழ்வை நாம் எதிர்கொள்வது என்பது வேறு, அந்நிய நாட்டில் நடக்கிற நிகழ்வுகளை நாம் எதிர்கொள்வது வேறு. மியான்மரில் வாழ்கிற ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு எதிராக மிகப் பெரிய வன்முறைகள் நடக்கின்றன. அதற்காக உலகெங்கும் வாழ்கிற இஸ்லாமிய நாடுகள், தங்கள் பண பலத்தையும், அதிகார பலத்தையும் பயன்படுத்தி மியான்மர் மீது தாக்குதல் நடத்திவிட முடியுமா?

காஷ்மீரில் 100 நாட்களுக்கு மேலாக நம்முடைய அரசு, தொலைத்தொடர்பு சேவையை முடக்கி வைத்திருக்கிறது. தேசத்தின் முக்கியமான ஆளுமைகளையும், முன்னாள் முதல்வர்களையும் கூட வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறார்கள். இந்த அநியாயத்துக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து வந்தாலோ, ‘காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட நாங்கள் ராணுவத்தை அனுப்பட்டுமா?’ என்று கேட்டாலோ நம் நாடு ஒப்புக்கொள்ளுமா? இந்தியாவை எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் சரி, இலங்கை பிரச்சினையில் நாம் தலையிடுவதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லையை எல்லாம் மீறித்தான், தமிழ்நாட்டின் நிர்பந்தத்திற்கு கட்டுப்பட்டு இளந்தலைவர் ராஜீவ் காந்தி நம்முடைய ராணுவத்தை அனுப்பினார். அதன் பயனாகத்தான் விலை மதிப்பில்லாத அவரது உயிரை நாம் இழந்தோம். இலங்கை பிரச்சினையில் இந்தியா எந்த அளவிற்குத் தலையிட முடியும் என்கிற உண்மையும், யதார்த்தமும் எல்லோருக்கும் தெரியும். ஆனால், உள்ளூரில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே காங்கிரஸையும், திமுகவையும் பழி சொல்லுகிறார்கள்.

 ‘நான் சொல்லித்தான் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார்’ என்று குருமூர்த்தி சொல்வதை நம்புகிறீர்களா?

 தமிழ்நாட்டு வாக்காளர்களையும், மக்களையும் மட்டுமல்ல, அதிமுகவின் உண்மையான தொண்டர்களையும் நினைத்துப் பரிதாபப்படுகிறேன். முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் சமாதியில் போய் உட்கார்ந்து தியானம் செய்தபோது, ‘முதல்நாள் இரவில் கனவில் ஜெயலலிதா வந்தார். அவர் சொல்லித்தான் தர்மயுத்தம் நடத்துகிறேன்' என்றார். ஆனால், ‘நான் சொல்லித்தான் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார்' என்று குருமூர்த்தி சொல்கிறார். இதில் யார் சொல்வது உண்மை, யார் சொல்வது பொய் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும். ‘வீரத்தமிழன்' பன்னீர்செல்வத்தின் மவுனத்தைப் பார்க்கிறபோது, குருமூர்த்தி சொல்வதுதான் உண்மையாக இருக்குமோ என்று எண்ணுகிறேன். தமிழ்நாட்டில் ஒரு எம்எல்ஏ கூட இல்லாவிட்டாலும் ஒரு நாடகத்தை நடத்தி, ஆட்சியையே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் எவ்வளவு கொடுமையானவர்கள் என்று மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 இந்தியாவில் சிறுபான்மையினர் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் வரலாம் என்று சொல்லப்படுவது பற்றி..?

 ஜனநாயகத்தின் வெற்றியும், அதன் தரமும் அந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் எவ்வளவு உரிமையோடும், சுதந்திரத்தோடும் வாழ்கிறார்கள் என்பதைப் பொறுத்துதான் கணக்கிடப்படுகிறது. அப்படிஇல்லை என்றால் அது ஜனநாயகம் அல்ல. அதன்பெயர் பெரும்பான்மைவாதம். நாம் எல்லோரும் ஏதோ ஒரு இடத்தில், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சிறுபான்மையினராகத்தான் இருக்க வேண்டியதிருக்கிறது. இந்தியாவைப் போன்ற வளர்ந்து வருகிற நாடுகள், அதிலும் குறிப்பாக வேலை வாய்ப்புக்கும், பொருளாதார முன்னேற்றத்துக்கும், தொழில்நுட்பப் பரிவர்த்தனைகளுக்கும், வளர்ந்த நாடுகளுடைய நெருக்கமான நட்பு வேண்டும் என்று எண்ணுகிற நாடுகள் சிறுபான்மை மக்களை முழு உரிமையுள்ள குடிமக்களாக நடத்துவதுதான் அவர்களின் எதிர்காலத்திற்கு உகந்தது. சிறுபான்மை மக்களுக்கு ஏற்படுகிற அச்சுறுத்தல்கள், அவர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகள் இந்தியாவைப் பற்றி ஒரு தவறான தோற்றத்தை உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தும். இதனால்  நமக்குத்தான் பாதிப்பு.

x