கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் இரவில் உலா வரும் யானைகளால் மலைக் கிராம மக்கள் அச்சம்


திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் இரவு நேரங்களில் சாலைகளில் இரண்டு காட்டு யானைகள் உலா வருவதால் வாகன ஓட்டிகள், மலைக் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் உள்ள மலைக்கிராமங்களான தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பெரும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களில் இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. அவை இரவு நேரங்களில் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

மேலும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் இரண்டு யானைகளும் அச்சுறுத்தும் வகையில் சாலையில் நகராமல் நீண்ட நேரம் நிற்பதும், சாலையில் உலா வருவதுமாக இருக்கின்றன. பெரும்பாலான மலைக்கிராம மக்கள் பேருந்து இல்லாத நேரங்களில் இருசக்கர வாகனம், கார்களில் கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்லுக்கு சென்று வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு (ஜூன் 2) தாண்டிக்குடி - பண்ணைக்காடு சாலையில் அந்த யானைகள் சுற்றித்திரிந்தன. இரவு நேரங்களில் வாகனங்களில் வருவோர் சாலையில் உலா வரும் யானைகளால் அச்சத்துடனே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இரண்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் வலியுறுத்தினர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “இரண்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியாக அவைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்றனர்.

x