அருண் சரண்யா
aruncharanya@gmail.com
அம்மா இறந்துவிட்டாள். அவள் இறந்ததைவிட மருத்துவமனையில் ஒரு மாதமாகப் படுத்த படுக்கையாகக் கிடந்தபோது அவள் பட்ட அவஸ்தைதான் இன்னும் வேதனை தந்தது. இரண்டு முறை மரணத்தின் விளிம்பைத் தொட்டுவிட்டு மீண்டவள், நேற்று நிரந்தரமாக விடைபெற்றுவிட்டாள்.
துயர் நிறைந்த நிமிடங்களைக் கடக்க முடியாமல் நான் தவித்துக்கொண்டிருந்த சமயத்தில், ஆறுதலாக என் தோளைத் தட்டினாள் அக்கா. “மீண்டுதான் வந்தாகணும் கார்த்திக்” என்று அவள் சொன்னாலும் அவளும் கலங்கிப்போய்தான் இருந்தாள்.
“இன்னும் ஒரு பத்து நாள்
அம்மா இருந்திருக்கலாம்”
என்று நான் மெல்லிய குரலில் சொன்னபோது, அக்கா,
அப்பா இருவர் முகத்திலும்
கேள்விக்குறி.
“என்ன சொல்ற கார்த்திக்?”
என்றாள் அக்கா.
“பத்து நாள்ல என் முதல் சம்பளம் வந்துடும்…
அதுலே அம்மாவுக்கு ஒரு புடவை வாங்கித் தரலாம்னு ஆசைப்பட்டேன்'' என்றேன் விசும்பிக்கொண்டே.
சில நொடிகள் மூவருமே மவுனமானோம்.
“நம்ம கையில எதுவுமில்லைப்பா. இன்னும் ரெண்டு வருஷத்திலே அஸ்வினிக்குக் கல்யாணம் செஞ்சுடணும்னு நானும் உங்க அம்மாவும் பேசினோம். ஆனா, இப்போ அவ கல்யாணத்துக்கு உங்க அம்மா இருக்கப்போறதில்லைன்னு ஆயிடுச்சு'' என்றார் அப்பா.
மறுநாள், பீரோவை ஒழிக்கத் தொடங்கியிருந்தாள் அக்கா. அம்மாவின் புடவைகளை எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தாள். நீலநிறப் புடவை ஒன்றை பீரோவிலிருந்து அவள் எடுத்தபோது, தன்னிச்சையாக என் வாயிலிருந்து அந்த வார்த்தைகள் வெளிப்பட்டன.
“அந்தப் புடவை எனக்கு வேணும்.”