தலைவர்கள் செல்ஃபி எடுத்துக்கொள்வது தரணிக்குப் புதிதல்ல. ஒபாமா முன்னெடுத்த இந்தக் கலாச்சாரம் மோடி வரை புகழ்பெற்றதுதான். ஆனால், கேரள முதல்வர் பினராயி விஜயன் இடம்பெற்றிருக்கும் இந்த லேட்டஸ்ட் செல்ஃபி, லைக்குகளைத் தாண்டி பல்லாயிரம் ஹார்ட்டின்களை அள்ளியிருக்கிறது. அதற்குக் காரணம், பிறவியிலேயே கைகள் இல்லாமல், கால்களையே கரங்களாக்கி சாதனைகள் புரிந்துவரும் பிரணவ்தான்.
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ மூலம் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை, கேரள வெள்ள நிவாரண நிதியாக முதல்வரிடம் கொடுக்க முடிவெடுத்தார் பிரணவ். அதற்காகத் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்துக்குச் சமீபத்தில் வந்திருந்தார். அப்போது நடந்த நிகழ்வுகள் அனைத்தும் நெகிழவைக்கும் தருணங்கள். அலுவலகத்துக்குள் குடும்ப சகிதம் நுழைந்த பிரணவைப் பார்த்ததுமே எழுந்து நின்று வரவேற்றார் முதல்வர் பினராயி விஜயன். “இந்தச் சேர்ல உட்காருங்க” என்று முதல்வர் சொல்ல, சிரித்துக்கொண்டே அமர்ந்தார் பிரணவ்.
தொடர்ந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பிரணவ், “இன்று என்னோட பிறந்தநாள்” என்று சொல்ல,உடனே, “ஆயிரம் வாழ்த்துகள்” எனச் சொல்லி முகம் மலர்ந்தார் கேரள முதல்வர். தொடர்ந்து பிரணவ், “என் வாழ்க்கையில நான் பிறந்தநாள் கொண்டாடுனதே இல்லை. இதான் முதல்முறை. அதை அர்த்தமுள்ளதா கொண்டாடணும்னு முடிவெடுத்தேன்” என்று சொல்லிக்கொண்டே கொண்டுவந்த காசோலையைக் கால் விரல்களில் பற்றி நீட்ட, அதை மகிழ்வுடன் பெற்றுக்கொண்ட முதல்வர், தனது கையால், பிரணவின் கால்களைப் பற்றிக் குலுக்கி அன்பைப் பொழிந்தார்.
அப்போது, “உங்களோட ஒரு செல்ஃபி எடுத்துக்கட்டா?” என பிரணவ் கேட்க, “ஓ… அப்கோர்ஸ்” என்று புன்னகையால் சம்மதித்தார் முதல்வர் பினராயி விஜயன். தன் கால் விரல்களால் செல்போனைத் தூக்கி பிரணவ் எடுத்த அந்த செல்ஃபி, இந்திய அளவில் ட்ரெண்டானது. முதல்வர் பினராயி விஜயனே தன் ஃபேஸ்புக் பக்கத்தில் அந்த செல்ஃபி தருணத்தைச் சிலாகித்து எழுதினார். “முதல்வர் முன் எப்போதும் இந்த அளவுக்குச் சிரித்துப் பார்த்ததில்லை எனவும், இப்படியான தனி நபர்களுக்கு பத்து நிமிடங்கள் ஒதுக்கிய வழக்கமும் இல்லை” என்றும் வியந்து பேசுகிறார்கள் கேரள தலைமைச் செயலக அதிகாரிகள்.