வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பாச்சா, யாரோ சகட்டுமேனிக்கும் திட்டுவதுபோன்ற சத்தம் கேட்டதும் சட்டென்று விழித்துக்கொண்டு வழக்கம்போல் வீறிட்டான். “பேய்த்தனமான பேனர்ஜிக்கள் ஒழிக. கொடிக்கம்பக் கொடூரர்கள் அழிக” என்ற முழக்கத்தைக் கேட்டுத் திரும்பினால், பறக்கும் பைக்தான் ஹாலுக்குள் அங்குமிங்கும் பறந்தபடி ஆவேசமாகத் திட்டிக்கொண்டிருந்தது. தலைவர்களின் விளம்பர மோகத்தால் மீண்டும் ஒரு விபத்து எனும் செய்தியால் வெகுண்டெழுந்து கொந்தளித்துக் கொண்டிருந்த பைக்கை சைலன்ட் மோடில் போட்டுவிட்டு அன்றைய பேட்டிகளுக்கு ஆயத்தமானான் பாச்சா.
முதலில் அமைச்சர் வளர்மதி.
“வெற்றிடம் வெற்றிடம்னு ரஜினி பேசுறதைக் கேட்டா வெறியா வருது. முன்னாடியெல்லாம் தெருவுக்குத் தெரு காலி கிரவுண்டு இருக்கும். பசங்க விளையாடுவாங்க. இப்ப அதையெல்லாம் வாங்கிப் போட்டு கட்டிடமும் கட்டிட்டோம்… சாரி, கட்டிட்டாங்க. அப்புறம் எப்படி வெற்றிடம் இருக்கும்? எனக்குப் புரியவே இல்லை” என்று கட்சிக்காரர்களிடம் கவலை பகிர்ந்துகொண்டிருந்த வளர்மதி முன் ஆஜரான பாச்சா, எச்சரிக்கை உணர்வுடன் எட்ட இருந்தே கேள்வியை வீசினான்.
“அமைச்சர்களோட கருத்துகளைத் திரிச்சி வெளியிடுறாங்கன்னு பேசியிருக்கீங்களே மேடம்? ராஜேந்திர பாலாஜி மாதிரியான அறிஞர்கள்…. ஸாரி, அமைச்சர்கள் லைவ்ல தானே லொள்ளு பேசுறாங்க? அதையெல்லாம் ஆன்லைன் எடிட்டிங் பண்ணியா ரிலீஸ் பண்றாங்க?” என்று பாச்சா கேட்ட கேள்வியை, எதிர்பார்த்ததற்கு மாறாக இன்முகத்துடனேயே எதிர்கொண்டார் வளர்மதி.
“தம்பி, நாங்கள்லாம் அம்மா காலத்துல இருந்தே அஹிம்சையைக் கடைப்பிடிக்கிறவங்க. எங்ககிட்ட கேள்வி கேட்டா, தேவையில்லாத சேதாரம் ஏற்படுமேன்னு, செய்தியாளர்களை சேஃபா பார்த்துக்கிட்டாங்க அம்மா. அப்பல்லோ யுகத்துல ஆளாளுக்கு மைக் நீட்டிப் பழகிட்டீங்க. அதான் அமைச்சர்கள் தங்களோட கருத்துகளைச் சுதந்திரமா வெளிப்படுத்துறாங்க…” என்றார் டிவியைப் பார்த்துக்கொண்டே.
“கமல், ரஜினியெல்லாம் வயசாகிப்போய், வாய்ப்பில்லாம அரசியலுக்கு வர்றாங்க…” என்று உச்ச நடிகர்களைப் பந்தாடிக்கொண்டிருக்கும் முதல்வர் பழனிசாமியின் மலர்ந்த முகமும், “ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் வீரப் பிள்ளைகள்” எனும் ராஜேந்திர பாலாஜியின் மிரட்டல் முகமும் மாறி மாறி டிவி திரையில் விரிந்தன. அடுத்ததாக, “செல்போனைக் கண்டுபிடிச்சவனைப் பார்த்தா மிதிக்கணும் போல இருக்கு” என்று சீறும் அமைச்சர் பாஸ்கரனின் ஆவேசப் பேச்சைக் கேட்டதும் அதிநவீன சாதனமான பறக்கும் பைக்குக்கும் பதற்றம் தொற்றிக்கொண்டது. அங்கமெல்லாம் நடுநடுங்க அங்கிருந்து கிளம்பிய பைக்கும் பாச்சாவும் “ஏம்பா இப்படி ஒரு அமைச்சர் இருக்கார்னு எடப்பாடிக்கே தெரியாது போல இருக்கே. டெர்ரர் டென்ஷன் பார்ட்டியா இருப்பார் போலயே…” என்று பேசிக்கொண்டுவந்தனர்.