திண்டுக்கல்: பழநி அருகே தீர்த்தக்கவுண்டன்வலசு கிராமத்துக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இருந்து இன்று (ஜூன் 3) திங்கட்கிழமை காலை தீர்த்தக்கவுண்டன்வலசு கிராமத்துக்கு அரசு பேருந்து புறப்பட்டது. பேருந்தை நீதிபாண்டியன் (52) என்பவர் ஓட்டினார்.
பழநி அருகேயுள் வேப்பன்வலசு கிராமத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட சற்று நேரத்தில் பேருந்தின் முன்பக்க இடதுபுற சக்கரம் கழன்று ஓடி சாலையோரம் இருந்த சாக்கடை கால்வாயில் விழுந்தது. அதைக் கண்ட பயணிகளும், சாலையில் சென்ற மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். நிலைமையை உணர்ந்த ஓட்டுநர், சாதுர்யமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தினார்.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் வேறு பேருந்து ஏற்பாடு செய்து பயணிகளை அனுப்பி வைத்தனர். அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்கவும், காலாவதியான பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகளை இயக்கவும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.