ஹாட் லீக்ஸ்


அண்ணனோட கணக்கு... அமைச்சரோடு பிணக்கு!


கொங்கு மண்டலத்தின் முக்கிய அமைச்சருக்கும் அவருக்கு எல்லாமுமாய் இருந்த அவரது அண்ணனுக்கும் திடீர் பிணக்காம். அண்ணன் திசைமாறிப் போனதால் அவர் கவனித்து வந்த தொழில் பொறுப்புகளைத் தனக்கு நெருக்கமான மாநகராட்சி கான்ட்ராக்டரிடமும் தனது உதவியாளரிடமும் ஒப்படைத்திருக்கிறாராம் அமைச்சர். அமைச்சரின் அண்ணன், ரஜினி மக்கள் மன்றத்தில் இணையப் போவதாகக் கடந்த ஒரு வருடமாகவே செய்திகள் வட்டமடிக்கின்றன. இந்த நிலையில், முக்கிய அரசு ஒப்பந்தங்கள் தொடர்பாக அண்ணன் மீதிருக்கும் வில்லங்கப் புகார்களை முன்வைத்து வருமான வரித்துறையினர் ரெய்டு நடவடிக்கைக்குத் தயாராகி வருவதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது. “இதைத் தெரிந்துகொண்டுதான் எங்களுக்குள் இப்போது அத்தனை இணக்கமில்லை என்பதுபோல் அண்ணனும் தம்பியும் சீன் போடுகிறார்கள்” என்ற தகவலும் கொங்கு அதிமுகவுக்குள் தடதடக்கிறது.


வந்தது ரெண்டு... சென்றது கண்டு!

இடைத்தேர்தல் சமயத்தில் நாங்குநேரி தொகுதியின் முக்கியக் கட்சி வேட்பாளரின் தேர்தல் செலவுகளுக்காக பிரபல சிமென்ட் நிறுவனம் லம்பாக ‘2 சி’யை அனுப்பி வைத்ததாம். அந்தப் பணத்தை தேர்தல் களத்தில் இன்னின்ன காரியங்களுக்கு இப்படி இப்படி செலவழிக்கலாம் என எஸ்டிமேட் போட்டுக் கொடுத்தாராம் தொகுதிக்கான சீனியர் தேர்தல் பொறுப்பாளர். கட்சித் தலைமையிடம் இவர் அப்படிச் சொல்லிவிட்டு வந்த அடுத்த சில நிமிடங்களில் உள்ளே வந்த இன்னொரு மீசைக்கார பிரபலம், “அதெல்லாம் என்னாத்துக்கு... சென்னையில இந்தப் பணத்த எங்கே அனுப்பணும்னு சொல்லுங்க. அங்கே பக்காவா அனுப்பி வெச்சிடுறேன்” என்று தலைவரிடம் சொன்னாராம். சபலப்பட்ட தலைவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்று தலையசைக்க பணம் அப்படியே சென்னைக்கு வந்து செட்டிலாகிவிட்டதாம். இப்போது இந்த விஷயம் வேறு சில நிர்வாகிகளின் காதுகளுக்குக் கசிந்து, “தலைமையே இந்த லட்சணத்துல இருந்துக்கிட்டு கட்சிக்காரன் சரியில்லைன்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்?” என்று கொந்தளிக்கிறார்களாம்.

ரொக்கம் பக்கம் சிக்கல்!

x