சவரக்கத்தி


அண்டனூர் சுரா
rajamanickam29583@gmail.com

அப்பா வழக்கமாகக் கடை திறக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே நான் கடையைத் திறந்திருந்தேன். அப்பா, எப்போது கடையைத் திறந்தாலும் முதல் வேலையாகக் கண்ணாடியை எடுத்து வெளிச் சுவற்றில் மாட்டிவிட்டுத்தான் மற்ற வேலையைத் தொடங்குவார். சவரக் கடையின் கதாநாயகி, கண்ணாடிதான். எந்த முகத்தையும் அழகாகக் காட்டுவிடும் கண்ணாடி வைத்திருக்கும் சவரக் கடைக்காரர்கள் பிழைத்துக்கொள்ளவே செய்கிறார்கள். அப்படியான கண்ணாடிதான் அப்பா கடையிலும் இருந்தது. அதை எடுத்து வெளியில் மாட்டியவனாய் என் முகத்தை ஒருமுறை பார்த்துவிட்டு சீப்பு பற்களுக்கிடையிலிருந்த அழுக்குகளை ஒரு குச்சியால் நெம்பி எடுத்துக்கொண்டிருந்தேன்.

அப்பா கடைக்குள் இருக்கையில் அவ்வளவு எளிதில் என்னைக் கடைக்குள் அனுமதிக்க மாட்டார். ஒரு ஸ்டூலை எடுத்து வெளியில் கிடத்தி என்னை அதில் உட்காரச் சொல்லி செய்தித்தாளைக் கொடுத்து வாசிக்கச் சொல்வார். அவர் செய்யும் வேலையை நான் கவனித்துவிடக் கூடாது என்பதற்காக அப்பா செய்யும் தந்திரம் அது. நான் பேப்பர் படிப்பதைப் போல கடைக்கண்ணால் அப்பாவின் தொழிலைக் கவனித்திருக்கிறேன். முகச்சவரம் செய்துகொள்ள வந்திருப்பவர், நாற்காலியில் விசாலமாக உட்கார்ந்துகொண்டு தலையை நாற்காலியின் மேற்கட்டையில் சாய்த்து ஒரு பக்க கையைத் தூக்கி அக்குளைக் காட்டி உட்கார்ந்திருக்க, அப்பா ஒரு துண்டை எடுத்து உதறி அக்குளுக்குக் கீழாக விரித்து பிளேடை எடுத்து கையால் அப்படி, இப்படியுமாக இரண்டு முறை உராய்த்து மேலிருந்து கீழாக ‘சரட்…சரட்…’ என வழித்து அதை விரலால் எடுத்து ஒரு பேப்பரில் வைப்பார். அப்பாவிற்கு அக்குளைக் கொடுப்பவர்கள் கண்களை மூடிக்கொண்டு சுகத்தில் இமை மூட, அப்பா அதை மேலிருந்து கீழாக வழித்து பேப்பரில் வைத்து ஒரு பெட்டிக்குள் போடுவதைப் பல முறை கவனித்திருக்கிறேன்.

ஒருநாள், கடைக்குள் அப்பா இல்லாத நேரம் பார்த்து கத்தரிக்கோலை எடுத்து, விரல்களால் ‘கிரிச் கிரீச்...’ என ஒலியெழுப்பிக்கொண்டிருக்க, திடீரென்று அப்பா வந்துவிட்டார். ஒரு பெரிய சீப்பை எடுத்து “இதை இனிமே நீ எடுப்பியா…எடுப்பியா…” என்று கேட்டுக்கொண்டே என்னை அடித்தது இன்னமும் நினைவில் இருக்கிறது.

x