திருப்பூர்: திருப்பூரில் ரூ.1191 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி பகுதிகளுக்கு புதிய 4-ம் குடிநீர் திட்டம், திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 165 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்டங்களை, கடந்த பிப்.11-ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அந்த திட்டத்தில் பிரதான திட்டமாக இருந்ததுதான், திருப்பூர் மாநகரின் மத்திய பகுதியிலுள்ள டவுன்ஹால் அரங்கம் மற்றும் அதை ஒட்டிய மல்டி லெவல் பார்க்கிங் மையம். ஆனால், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திறப்பு விழா செய்யப்பட்டு, தற்போது வரை இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
ரூ.53 கோடி மதிப்பில் 2 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட அரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கருத்தரங்குகள், கூட்டங்கள் மற்றும் கண்காட்சிகளை நடத்தலாம். வணிகரீதியிலான கடைகள் உள்ளிட்ட விஷயங்கள், ஒப்பந்ததாரர்கள் கோரிக்கைக்கேற்ப அமைத்து கொள்ளலாம். அதேபோல், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தி கொள்ளலாம். அரங்கத்துக்கு வருபவர்கள் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக, ரூ.13 கோடி மதிப்பில் மல்டி லெவல் பார்க்கிங் மையமும் கட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் கூறும்போது, “டவுன்ஹால் அரங்கம் மற்றும் மல்டி லெவல் பார்க்கிங் இரண்டும் சேர்ந்து, ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கு ஏலம் கோரி வருகிறோம். 250-க்கும் அதிகமான கார்கள், 500-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு இடம் உள்ளது.
டவுன்ஹாலில் நிகழ்ச்சிகள் நடந்தால், மல்டி லெவல் பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்திக்கொள்ள தாராள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. டவுன்ஹால் அரங்கம், மல்டி லெவல் பார்க்கிங் ஆகிய இரண்டையும் சேர்த்துதான் ஏலம்விட உள்ளோம். ஏற்கெனவே 2 முறை ஏலம் கோரப்பட்டது. ஆனால், ஏலத்தில் போதிய இலக்கை ஒப்பந்ததாரர்கள் கோரவில்லை.
தற்போது அரங்கம் மற்றும் மல்டி லெவல் பார்க்கிங் உள்ளிட்டவற்றில் சில இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. வரும் 10-ம் தேதி மீண்டும் ஏலம் நடைபெறுவதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம். அதேபோல், டவுன்ஹால் அரங்கத்துக்கு, அந்த இடத்தை வழங்கிய ரங்கசாமி செட்டியார் பெயர் சூட்டுவதற்கான கோரிக்கையையும் அரசுக்கு கடிதமாக எழுதியுள்ளோம்” என்றார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தேவாங்கர் முன்னேற்ற அமைப்பின் மாநிலத் தலைவர் இரா.விஜயகுமார் அனுப்பியுள்ள மனுவில், ‘‘திருப்பூர் வரலாற்றில் தொன்மையானதும், லட்சக்கணக்கான அரசியல் மேடைகளை கண்டதும், மக்களின் பொழுதுபோக்குக்கு அரங்குகளை, கண்காட்சிகளுக்கு பல வகையில் பயன்பட்ட ரங்கசாமி செட்டியார் நினைவு டவுன்ஹால் மைதானம், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் புதிதாக கட்டப்பட்டு, பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
அப்போதைய எம்.எல்.ஏ. சு.குணசேகரன், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் இருவரும், ரங்கசாமி செட்டியார் நினைவு ஹால் என்று பெயர் சூட்டுவோம் என உறுதி அளித்தனர். இதை முதல்வர் பரிசீலிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.