25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்ட கோவை அரசு பொருட்காட்சி


கோவை: கோவையில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சியை ஒரு வாரத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

கோவை வ.உ.சி. மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அரசு பொருட்காட்சி கடந்த மே 25-ம் தேதி தொடங்கியது. தினமும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை, விடுமுறை நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்று வருகிறது.

அரசு துறைகள் சார்பில் 34 அரங்குகள் மற்றும் தனியார் சார்பில் பல்வேறு அரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பெரியவர்களுக்கு ரூ.15, சிறியவர்களுக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பள்ளி விடுமுறை காலம் என்பதால் வார நாட்களிலும் மக்கள் திரளாக பார்வையிட வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறும் போது, “அரசு பொருட்காட்சி தொடங்கப்பட்ட கடந்த வாரம் சனிக்கிழமை முதல் செவ்வாய்கிழமை வரை நுழைவு கட்டணம் வசூலிக்கப்படவில்லை. தினமும் மக்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர்.

நேற்று சனிக்கிழமை ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்தனர். ஞாயிற்றுகிழமையான இன்று அதை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றனர்.