சேலம்: பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டதன் எதிரொலியாக, ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து, அங்குள்ள சுற்றுலா இடங்களில், குடும்பம் குடும்பமாக ஏராளமானோர் திரண்டிருந்ததால், திருவிழாக் கோலத்தில் ஏற்காடு களைகட்டியிருந்தது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின்னர் வரும் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், கடலூர் உள்பட பல மாவட்டங்களில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து, மக்களை வாட்டியது.
இதனால், பள்ளிகள் திறப்பை, ஒத்தி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தமிழகத்தில் பள்ளிகள் வரும் 10-ம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டதால், மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வெயிலின் தாக்கத்தால், குளுகுளு சுற்றுலாத் தலங்களுக்கு, குழந்தைகளை அழைத்துச் செல்வதில் பெற்றோரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
எனவே, ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காடு சுற்றுலாத் தலத்துக்கு, சுற்றுலாப் பயணிகள் வருகை இன்று அதிகரித்து காணப்பட்டது. ஏற்காடு அண்ணா பூங்கா, ரோஜாத் தோட்டம், அரசு தாவரவியல் பூங்காக்கள் என பூங்காக்கள் அனைத்திலும் குடும்பம் குடும்பமாக சுற்றுலாப் பயணிகள் பலரை காண முடிந்தது.
பூங்காக்களில், கோடை விழாவில் வைக்கப்பட்டிருந்த மலர்க்காட்சிகள் இருந்ததால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்தனர். மேலும், ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்யும் இடங்களிலும், சுற்றுலாப் பயணிகள் கூட்டம் மிகுந்திருந்தது.
இதேபோல், பாகோடா பாயின்ட், லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், கரடியூர் உள்பட காட்சிமுனைப்பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக காணப்பட்டனர். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருந்தால், சேலம் அடிவாரம்- ஏற்காடு மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக இருந்தது.
இதனிடையே, ஏற்காட்டில் நேற்று முன்தினம் மழை பெய்த நிலையில், அங்கு வெயிலின் தாக்கம் மறைந்து, குளுகுளுவென்ற சூழல் நிலவுவது, அங்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், “தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. எனவே, குழந்தைகளை விளையாடுவதற்கு வெளியே அனுப்ப முடிவதில்லை. அவர்களை வீடுகளிலேயே வைத்து, கவனித்துக் கொள்வதும் சிரமமாக உள்ளது. எனவே, ஏற்காடு சுற்றுலா வந்தோம். இங்கு காலநிலை குளுகுளுவென இருப்பது, உற்சாகத்தை அளிக்கிறது” என்றனர்.