கொடைக்கானலில் இடியுடன் கூடிய கனமழை: மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு


கொடைக்கானலில் பெய்த கனமழையால் வெள்ளிநீர் வீழ்ச்சியில் கொட்டிய மழைநீர்.

திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரத்துக்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்ததால் அருவிகளில் நீர் கொட்டியது. பள்ளங்கி சாலையின் குறுக்கே மரம் விழுந்ததில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கொடைக்கானல்- பள்ளங்கி சாலையில் அட்டுவம்பட்டி அன்னை தெரசா பல்கலை. அருகே சாலையின் மரம் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் கம்பிகள் மீது விழுந்ததால் அப்பகுதியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

சிறிது நேரத்தில் மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது. கனமழை காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, கரடிச்சோலை அருவி உள்ளிட்டவைகளில் மழை நீர் கொட்டியது. வார விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. காலை முதலே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. சுற்றுலாத்தலங்களில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

காலையில் இதமான தட்ப வெப்பநிலை காணப்பட்ட நிலையில், பகல் ஒரு மணிக்கு மேல் இடியுடன் கூடிய கன மழை பெய்யத்துவங்கியது. அதனால் சுற்றுலா பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். மே மாதம் துவக்கம் முதல் வெயிலின் தாக்கம் மலைப்பகுதியையும் விட்டுவைக்காத நிலையில், மேல் மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து மே மாதம் இறுதியில் பெய்த தொடர் மழை காரணமாகவும், தற்போது பெய்து வரும் கன மழையாலும் கொடைக்கானல் மலைப் பகுதியில் மீண்டும் பசுமை போர்வை போர்த்தியது போல் மரங்கள் செழுமையடைய துவங்கியுள்ளன.

கொடைக்கானலில் மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் மலையடிவாரத்தில் உள்ள மஞ்சளாறு அணை, மருதாநதி அணை, ஆத்தூர் நீர்த்தேக்கம், வரதமாநதி அணை, பாலாறு பொருந்தலாறு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.