நந்து சுந்து
nandaaft@gmail.com
மாலை நேரம். மழை வலுத்திருந்தது. கிருஷ்ணகுமார் மருத்துவக் கல்லூரியை விட்டுக் கிளம்பலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டே கையில் இருந்த புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். மருத்துவக் கல்லூரிப் பேராசிரியராகப் பணிக்குச் சேர்ந்து இன்றுடன் சரியாக ஒரு வருடம் முடிந்துவிட்டது. மனதுக்கு நிறைவாக இருந்தது. எப்போதும் பைக்கில்தான் கல்லூரிக்கு வருவான். இன்றைக்கு சர்வீஸுக்கு வண்டியை விட்டிருந்தான். ஓலாவில் ஆட்டோ கிடைப்பதும் சிரமமாக இருந்தது. காத்திருக்கத்தான் வேண்டும். வேறு வழியில்லை.
வீட்டில் தனக்காகக் காத்துக்கொண்டிருக்கும் அம்மா பற்றிய நினைவு வந்தது. ‘இதே மழையில், அம்மா எத்தனை நாட்கள் வீடுகளுக்குப் பால் பாக்கெட் போட்டு என்னைப் படிக்க வைத்தாள்’ – என்று மனதுக்குள் பழைய நினைவுகளை அசைபோடத் தொடங்கினான்.
எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அன்றும் அப்படித்தான், மழை அடித்துப் பெய்துகொண்டிருந்தது. அதிகாலை நான்கு மணி. அறையில் சிறிய விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் கிருஷ்ணகுமார் படித்துக்கொண்டிருந்தான். அவனுடைய அம்மா ஆரவல்லி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். பெரிய விளக்கு போட்டால் அவளின் நித்திரை கலையலாம். புரண்டுபடுத்தாள். ஜூரத்தின் கடுமை தாங்காமல் ஏதோ முனகினாள்.