எழுத்துக் கூலி


துடுப்பதி ரகுநாதன்
tsragu123@gmail.com

‘முழு நிலவு’ பத்திரிகை அலுவலகம். ஆசிரியர் எழுத்து வேந்தன் தனக்கு வந்த மின்னஞ்சல்களைப் படித்துக்கொண்டிருந்தார். எழுத்தாளர், பத்திரிகையாளர் என்று பன்முகம் கொண்ட எழுத்து வேந்தன், புகழ்பெற்ற திரைக்கதை ஆசிரியரும்கூட.
ஒரு படத்துக்கு இருபது லட்சம் வரை டிமாண்ட் செய்து வாங்குபவர். அன்றைக்கு நல்ல மூடில் இருந்தார். பாராட்டி எழுதியிருந்த வாசகருக்குப் பதில் எழுத ஆரம்பித்தவர், அறைக்குள் உதவி ஆசிரியர் சுந்தரம் வருவதைக் கவனித்ததும் நிமிர்ந்து அவரைப் பார்த்தார்.
சுந்தரம் எதையோ சொல்வதற்குத் தயங்கித் தயங்கி நின்றார்.
“என்ன சுந்தரம். என்னவோ சொல்ல வந்தீங்க…?”
“நம்ம பத்திரிகையிலே பத்து வருஷமா சிறுகதை எழுதிட்டு இருக்காரே பாண்டியமோகன்னு ஒரு எழுத்தாளர்… நம்ம பத்திரிகையில தொடர்கதையெல்லாம் எழுதியிருக்கார் சார்.”
“ஆமா, ஞாபகமிருக்கு. அவருக்கு என்ன இப்போ?”
“நேத்து ஆபீஸுக்கு வந்திருந்தார். சன்மானம் விஷயமா பேசறதுக்காகவே மதுரையில இருந்து வந்தாராம்.”
“என்னத்துக்கு சன்மானமாம்…?”
“அவருக்கு வயசாயிடுச்சு…உடம்புக்கு வேற சரியில்லையாம். வேற வருமானமும் இல்லை. நம்ம பத்திரிகையில வந்த அவரோட கதைகளுக்காக ஒரு இரண்டாயிரம் சன்மானம் கிடைக்குமான்னு கேட்டார்…”
ஆசிரியர் பெரிய நகைச்சுவையைக் கேட்டதுபோல் கடகடவென்று சிரித்தார்.
“என்ன சுந்தரம்… அந்த ஆளுக்குத்தான் வயசாச்சு… அறிவில்லேனா.. அதை ஒரு பெரிய விஷயமா என்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்கீங்களே… உங்க லெவல்லேயே அதை டீல் பண்ணி அனுப்பிவிட்டுருங்க…”
“என்னான்னு சொல்லட்டும் சார்?”
“அதாவது… சன்மானமெல்லாம் குடுக்கிறதில்லை. பத்திரிகையில உங்க பேரும், கதையும் வர்றதே பெரிய விஷயம்னு சொல்லிடுங்க” என்று சொல்லிவிட்டு, லேப்டாப்பைப் பார்க்கக் குனிந்தார்.
“சார், நாம அவர் கதை பிரசுரமாகிற பிரதியைக்கூட அவருக்கு அனுப்புறதில்லைன்னு கொஞ்சம் கோபமா பேசுறார்… அவர்கிட்டே எப்படி…” என்று தயங்கினார் சுந்தரம்.
“சுத்த அதிகப் பிரசங்கியா இருப்பார் போல… பெரிய பெர்னாட்ஷா… இவர் கதையையும் போட்டு காப்பியையும் அனுப்பணுமா? இனிமே அவர் கதையெல்லாம் போடாதீங்க” என்றவர், நாற்காலியில் தளர்வாகச் சாய்ந்தபடி தொடர்ந்தார்.
“உங்களுக்கு அனுபவம் போதாது சுந்தரம். சில அடிப்படை விஷயங்களைக் கத்துக்கோங்க. தமிழ்நாட்ல பத்திரிகைகள்ல எழுதுற எழுத்தாளர்கள் எல்லாம் சன்மானம் எதிர்பார்க்கிறது ரொம்பத் தப்பு… இந்தக் காலத்திலே வீட்டுக்கு ஒருத்தர் வேலைவெட்டி இல்லாத சோம்பேறிங்களா இருக்
காங்க. அவங்கதானே இப்பல்லாம் எழுதறாங்க… அவங்க பேரைப் பத்திரிகைகள்ல பார்க்கிறாங்களே அதுதான் அவங்களோட சன்மானம். அந்தக் காலத்துலே எழுத்தாளர்னு சொன்னா 
ஒரு நூறு பேர்தான் இருப்பாங்க… ஆனா, இந்த ஃபேஸ்புக் வந்தது லேருந்து தெருவுக்குத் தெரு எழுத்தாளர்கள்தான். ஃபேஸ்புக்ல நாலுவரி தப்புத் தப்பா அடிச்சு பழகிட்டா உடனே பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பிடறாங்க.. சரிதானே நான் சொல்றது?” என்று சுந்தரத்தைப் பார்த்தார் எழுத்து வேந்தன்.
“புரியல சார்…”
“புரியற மாதிரி சொல்றேன். இனி நாம கூட பத்திரிகை நடத்த விளம்பரத்தை மட்டும் நம்பிப் பிரயோஜனம் இல்ல… நமக்குக் கதை, கட்டுரை அனுப்புறவங்களைப் பயன்படுத்தி அட்டகாசமா காசு பார்க்கலாம். அதுக்கு ஒரு ஐடியா இருக்கு…”
“என்ன ஐடியா சார்?” என்று பின்னந்தலையைச் சொரிந்தபடியே கேட்டார் சுந்தரம்.
“இப்ப பதிப்பகங்கள் எல்லாம் எப்படி புக் பப்ளிஷ் பண்றாங்க தெரியுமா? பலரும் தங்களோட எழுத்தைப் புத்தகமா பார்க்க ஆசைப்படறாங்க… அவங்ககிட்ட பத்தாயிரம், பதினைஞ்சாயிரம்னு பணம் வாங்கிக்கிட்டு பப்ளிஷர்ஸ் கொஞ்சமா புக் போடுவாங்க. எழுதுனவருக்கு ஒரு 100 பிரதிகள் கொடுத்துட்டு பத்துப் பத்திரிகைகளுக்கு விமர்சனத்துக்குன்னு ரெண்டு ரெண்டு காப்பி அனுப்பி வச்சுடுவாங்க... மற்றபடி அந்தப் புத்தகங்கள் விற்பனைக்கே வராது… ஒரு புத்தகம் போட்டா எழுத்தாளர்கள்கிட்ட வாங்குற பணத்துல ஒரு ஐயாயிரமாவது மிச்சமாகும்… வருஷத்துக்கு எப்படியும் ஐம்பது, நூறு புத்தகங்கள் போடுறாங்க... கணக்குப் போட்டுப் பாருங்க… எவ்ளோ காசு வரும்?”
“ஆமா சார், நல்ல லாபம்தான்.”
“அதேதான்… அந்த ஃபார்முலாவைத்தான் நாம நம்ம பத்திரிகையிலேயும் ஃபாலோ பண்ணப்போறோம். எல்லோரும் அட்ரஸோட போன் நம்பரையும் அனுப்புறாங்கள்ல. எல்லாருக்கும் போன் பண்ணுங்க…
‘உங்க கதையைப் பத்திரிகையில் போடலாம்னு இருக்கோம்… பத்திரிகையில இப்ப நிதி நிலைமை சரியில்லை… நீங்க ஒரு ஆயிரம் ரூபாய் அனுப்பி வைங்க’ன்னு சொல்லுங்க. நிதி உதவி செய்றவங்களுக்கு முன்னுரிமை தருவோம்னு சொல்லிப் பாருங்க… அப்புறம் பாருங்க. கதையோட காசும் வந்து குவியும்.”
“சரி சார்… செஞ்சிடறேன்.”
“இன்னொரு முக்கியமான விஷயம்… நம்ம பத்திரிகையில் வருகிற சினிமா செய்திகள் போதாது… நிறைய கவர்ச்சிப் படங்கள் போடுங்க…ஆன்லைன்லதான் அவ்ளோ படம் கிடைக்குதுல்ல. நல்லா ஹாலிவுட் நடிகைங்க படங்களா போடுங்க…”
“ஓகே சார்” என்று திரும்பி நடந்த சுந்தரம், சட்டென்று நின்றார்.
“சார் இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்…”
“என்ன… நம்ம பத்திரிகையைப் படிக்க சன்மானம் வேணும்னு வாசகர் யாராவது போன் பண்ணாங்களா…?” என்று குறும்பாகச் சிரித்தார் எழுத்து வேந்தன்.
“இல்லை சார். வெள்ளிக்கிழமை ரிலீஸான, ‘வா வாத்யாரே வூட்டாண்ட’ படத்தோட கதை நீங்க எழுதுன ‘ஜிங்குனமணி’ நாவலோட அப்பட்டமான காப்பின்னு ஃபேஸ்புக்ல ஒரு ரிவ்யூ படிச்சேன்..”
“என்னாது?”
“ஆமா சார்.. நம்ம ப்ளூ சட்ட மாறன்கூட சொல்லிருக்கார்.”
“பாருங்க அநியாயத்தை! பத்து மாசம் சுமந்து குழந்தையைப் பெத்தெடுக்கிற தாய்க்குத்தானே தெரியும் பிரசவத்தோட வலி? ஒரு ஐடியாவை யோசிச்சு மாசக்கணக்குல அதை டெவலப் பண்ணி எவ்ளோ உழைச்சி, மூளையைக் கசக்கி ஒருத்தன் கதை எழுதுவான்… அதைத் திருடி படமா எடுத்து கோடிக்கணக்குல லாபம் பார்க்குறாங்களே.. இது நியாயமா? இதை இப்படியே விடக் கூடாது. நம்ம வக்கீல் கனக ராஜூவுக்கு உடனே போன் போடுங்க. அந்த சினிமா கம்பெனி மேல கேஸ் போடுங்க… ஒரு அம்பது லட்சமாவது வாங்காம விடக் கூடாது…” என்று கத்தத் தொடங்கினார்.
உதவி ஆசிரியர் சுந்தரம் வக்கீலுக்கு போன் செய்ய விரைந்தார்.

x