“காதுதானே நம்மளோட பொறந்தது…
காது தோடு பத்தர் வூட்டுல பொறந்ததுதானே…”
சடக்கென்று நிமிர்ந்தான் சரவணன். வித்தியாசமான பழமொழி. இதுவரை கேள்விப்பட்டதில்லையே!
சொன்னவரைத் திரும்பிப் பார்த்தான். குள்ளமான உருவம். நசுங்கலான தோற்றம் கொண்ட முகம் எண்ணெய் பரப்பில் நனைந்து கிடந்தது. வழுக்கைத் தலை. கசங்கலான பழுப்பேறிய வெள்ளைச் சட்டை, வேட்டி. வெளுத்துப்போன ஊதா நிற ஸ்லிப்பர்.
சாவு வீடு அது. சரவணனுக்கு நெருங்கிய உறவு. உள்ளே பெண்கள் அழுதுகொண்டிருந்தார்கள். வாகனங்கள் புழங்குகிற சாலையில் இருந்த வீடு. அதுவரை அதிர அதிரக் கொட்டடித்துக்கொண்டிருந்தவர்கள் சற்று நிறுத்திவிட்டு டீ குடிக்கக் கிளம்பியிருந்தார்கள். சாலைக்கு எதிரே நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அங்கே அமர்ந்திருந்தபோதுதான் இந்தப் பழமொழியைக் கேட்டான்.
எழுந்து அந்த மனிதர் அருகே போனான்.
அறிமுகம் செய்துகொண்ட பின்னர் கேட்டான், “இப்ப ஒரு பழமொழி சொன்னீங்களே... அது எதுக்கு?”
“தம்பி…என் பேரு அய்யாக்கண்ணு. செத்துப்போனவருக்கு பங்காளி முறை. அவருக்கு அண்ணன். இருந்தவரைக்கும் அவன் என்னை மதிச்சதே இல்ல. நாலு காசு இருந்தா ஏத்தமாதானே இருக்கும். எனக்கு அறுவத்தஞ்சி ஆயிடிச்சு இந்தப் பங்குனியோட. என் கையால 12 பொட்டப் புள்ளங்களுக்கு நின்னு கல்யாணம் பண்ணி வச்சிருக்கேன். எல்லாம் உடம்பு ஒழப்புதான். ஆனா எனக்கு இதுவரைக்கும் புள்ள கெடயாது. சரி… அது அந்த சிவன் எழுதுன எழுத்து. நாம மாத்த முடியுமா?”
சரவணனுக்குப் பொறுமை கடந்தது. ‘எதையோ கேட்டா எதையோ சொல்றாரே…’
முகக்குறிப்பைப் புரிந்துகொண்ட அந்த மனிதர், “சொல்றேன் தம்பி. போன வாரம் ஒரு வீட்டுக்கு விருந்துக்குப் போனேன். வளகாப்பு வீடு. எனக்குச் சோத்தாங்கை பக்கம் உள்ளவனுக்குப் பாயசம் போடறான். பீச்சாங்கை பக்கம் உள்ளவனுக்கு மோரு போடுறான். நான் நடுப்பற உக்காந்திருக்கேன். என்ன வேணும்னு கேக்கலே… என்னோட தம்பி மருமவளுக்குத்தான் வளகாப்பு. என்னைக் கண்டுக்கலே… வெள்ளயும் சொள்ளயுமா இருந்தா கவனிப்பாங்க. என்னைப் பார்த்தா ஏதோ எச்ச சோறு திங்க வந்தவன்னு நெனச்சிருக்கலாம். இதே என்னோட பொறந்திருந்தா இப்படி விடுவாங்களா? அதான் உறவுங்கறது” என்றவர் சிறிது இடைவெளி விட்டு,
“காதுதான் உறவு. இந்த உறவு எல்லாம் தோடு மாதிரி… எங்க தாத்தா 10 வேலி நெலம் வச்சிருந்தாரு. ஒரு மனுஷன மதிக்க மாட்டாரு… கடேசில எல்லாத்தையும் மருமவன்கிட்ட இழந்துட்டு செத்தாரு. அவரு சொன்ன பழமொழிதான் இது” என்றார் வேட்டியை ஒதுக்கியபடி.
சரவணன் சாலையைப் பார்த்தபடி யோசித்துக்கொண்டிருந்தான். ‘உறவுகள்லாம் காது தோடுகள் மாதிரி... எவ்வளவு அருமையான உதாரணம். தோடு காதுக்கு அழகுதான். ஆனா, எப்ப வேணாலும் போயிடும். இல்ல மாறிடும். அப்படித்தான் இந்த உறவுக்கூட்டம்… எல்லாம் பளபளக்கிற தோடு மாதிரிதான்…ஆனா ஒண்ணுக்கும் உதவாது.’
டீ குடித்துவிட்டு வந்தவர்கள் மீண்டும் கொட்டெடுத்து அடிக்க ஆரம்பித்தார்கள். இனி பேச முடியாது. நன்றி சொல்லிவிட்டு தன் இடத்திற்கு வந்து உட்கார்ந்துகொண்டான் சரவணன்.
வயிறு பசித்தது. மணியைப் பார்த்தான். ஒரு மணியாகப் பத்து நிமிடங்கள் இருந்தன. சாப்பிட்டு வரலாம் என்று எழும்போது கவனித்தான் நாராயணன் சித்தப்பாவை. அப்பாவுக்குத் தூரத்து உறவில் சித்தப்பா முறையானவர். மனசுக்குள் பழைய கசப்பு கசிந்தது.
“வாங்க சித்தப்பா…” என்றான்.
“என்னப்பா சரவணா… எப்படி இருக்கே?”
“நல்லா இருக்கேன் சித்தப்பா… நீங்க எப்படி இருக்கீங்க?
“நல்லா இருக்கேம்ப்பா” என்றபடி உட்கார்ந்தார்.
“சித்தி வரலே…?”
“இல்லப்பா… நானே வந்திருக்க மாட்டேன். எங்கேயும் போக முடியலே… முழங்கால் வலி… செத்துப்போனவனோட அப்பா எனக்கு மாமா முறை. ஒருகாலத்துல நிறைய உதவி செஞ்சிருக்காரு. சித்திக்கும் இந்தக் குடும்பத்துக்கும் ஆகாது.. அதான் வரலே…”
சரவணனுக்கு வெறுப்பாக இருந்தது. என்ன மனிதர்கள் இவர்கள்? சாவில்கூட விருப்பு, வெறுப்பு பார்க்கிறார்கள். இன்னும் மாறவில்லை போலும். இறந்துபோனவன் சரவணனுக்கு நெருக்கமானவன். நல்ல மனிதன். யார் மனம் நோகவும் பேச மாட்டான். எல்லாக் காரியங்களிலும் முன் நிற்பான். பதிலுக்குச் சின்ன மரியாதையைக்கூட எதிர்பார்க்க மாட்டான். ‘எனக்கு எதுவும் வேண்டியதில்லை சரவணா… சொந்தக்காரங்க கூட்டம் கூட்டமா இருக்கணும். நல்லதோ கெட்டதோ என் காதுக்கு சேதி வந்தா, கெளம்பி வந்துடுவேன். அவ்வளவுதான்… போறவழிக்கு ஒண்ணயும் தூக்கிட்டுப் போக முடியாது… காதற்ற ஊசியும் வாராது காண் உன் கடைவழிக்கேன்னு பட்டினத்தார் சொல்லியிருக்கார்ன்னு எங்கப்பா அடிக்கடி சொல்லுவாரு சரவணா’ என்பான்.
“சாப்பிட்டியா சரவணா?” என்றார் சித்தப்பா.
“இல்ல சித்தப்பா…போகணும்” என்றான்.
“சரி வா…” என்று எழுந்தார். சரவணனும் எழுந்தான்.
ஹோட்டல் தேடி உட்கார்ந்ததும் நாராயணன் சித்தப்பா ஆரம்பித்தார்.
“சரவணா உங்கக்கா வீட்டுக்காரர் இறந்ததுக்கு என்னால வர முடியல. பல வேலைகள்… சித்திக்கும் வேலைகள்… அதான் உன்கிட்ட போன்ல பேசினோம் நானும் சித்தியும். உங்கக்கா உங்க வீட்டுக்கு வந்தா எனக்குத் தகவல் சொல்லு அவகிட்ட ஒருமுறை போன்ல பேசிடறேன். ஆறுதலா இருக்கும்”
உள்ளுக்குள் ஒரு சினப் பாம்பு சட்டென்று எழுந்து படமெடுத்து நின்றது சரவணனுக்குள். அடக்கினான்.
“வேணாம் சித்தப்பா… அதப் பத்திப் பேச வேணாம்.”
“என்னாச்சு சரவணா? ஏன் இப்படிச் சொல்றே?”
“சித்தப்பா நீங்க என் அப்பாவோட கூடப் பிறக்கலே… தூரத்து உறவுல சித்தப்பா முறை. என் அப்பாவோட கூடப் பிறந்திருந்தா... இப்படிப் பண்ண மாட்டாங்க. நல்லத ஒதுக்குனாலும் கெட்டத ஒதுக்கக் கூடாதுன்னு சொல்வாங்க. இப்ப கெட்டத சர்வ சாதாரணமா ஒதுக்கிடுறீங்க. போன்லேயே எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்னு நினைக்கிறீங்க… சொந்த பந்தங்களாலதான் ஒருத்தரோட வாழ்க்கையே பலமா இருக்கும். எங்கக்கா வீட்டுக்காரர் செத்ததுக்குக்கூட வர முடியலேங்கறது பரவாயில்ல… ஆனா அதுக்கப்புறம் நெனச்சிருந்தா நீங்களும் சித்தியும் வந்திருக்கலாம். வரலே… காரணம் நெருங்குன சொந்தம் இல்லல்லே…”
“என்ன சரவணா…இப்படிப் பேசறே? நான் உண்மையான அக்கறையிலேதான் கேக்கறேன்… உங்கப்பா எனக்குக் கூடப் பிறக்கலன்னாலும் அண்ணன்தான்… அந்த மரியாதைய வச்சிருக்கேன்.”
“இல்ல சித்தப்பா… அப்படியிருந்தா நீங்க தேவகி வீட்டுக்காரருன்னு சொல்லியிருப்பீங்க…அப்படிச் சொல்லலே.. உங்கக்கா வீட்டுக்காரருன்னுதான் சொன்னீங்க. உள்ளே உள்ளதுதான் உதட்டு வழியா வரும். அப்புறம் உங்கக்கா வந்தா சொல்லு போன்லே பேசறேன்னு மறுபடியும் சொல்றீங்க… நேர்ல வர்றேன்னும் சொல்ல முடியலே… நீங்க மட்டும் இல்ல சித்தப்பா… உங்க பையனும் மருமகளும்கூட இதையேதான் சொன்னாங்க… எல்லாருக்கும் எல்லா சமயமும் முடியாம போவும் சித்தப்பா. அதுக்காக ஒதுக்கிட முடியாது. நமக்கு உண்மையான அன்பிருந்தா நேரம் ஒதுக்கிப் போய் பார்த்துட்டு ஆறுதலாப் பேசிட்டு வரலாம். போன உயிரை நம்மால கொண்டுவர முடியாது. ஆனா இழந்தவங்களுக்கு நாலு வார்த்தை ஆறுதலா சொன்னா… அதுவும் அன்புதான்.”
“நீ என்னதான் சொல்ல வர்றே?” என்றார் கோபமாக நாராயணன் சித்தப்பா.
“ஒண்ணும் சொல்ல வரலே சித்தப்பா. உங்களுக்கு வர விருப்பம் இல்லாட்டி விட்டுடுங்க. அதுக்காகச் சப்பைகட்டு கட்ட வேணாம். அந்தப் பெரியவர் ரொம்பச் சரியா சொன்னாரு. காதுதான் நம்மோட பொறந்தது காது தோடு பத்தர் வூட்டுல பொறந்ததுதான். அதுதான் இன்னிக்கு உறவுகளோட குணம். நம்மளோட வசதிக்காக ஒண்ண செய்யக் கூடாது சித்தப்பா… துக்க வீட்டுக்குப் போறது. அப்படியே அன்னிக்கே ஒரு நல்லதுக்கும் போறதுன்னு… உறவுகளோட அன்புக்காக ஒரு காரியம் பண்ணா அது கடைசிவரைக்கு நிலைச்சிருக்கும். வேண்டா வெறுப்பா ஒண்ணு பண்ணறதவிட அதைச் செய்யாம இருக்கறது நல்லது சித்தப்பா…” என்றபடி எழுந்து கைகழுவப்போனான்.
எதுவும் பேசாமல் நாராயணன் சித்தப்பா உட்கார்ந்திருந்தார். பிசைந்த மோர்ச் சோறு சூடிழந்திருந்தது.